மெய்நிகர் உலகம்




ஒரு பெண்னைப் பார்த்து அவளுடன் பழகி அவளை பிடித்து அவளிடம் காதலை சொல்லி பின் அவள் அதை ஏற்று இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் அல்லது அவள் அதை நிராகரிக்கிறாள்.வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் கதை இதுதான்.நேர் பரிச்சயம் இல்லாமல் கடிதம் மூலமாகவும் உறவுகள் பலப்படும்.ஆனால் இணையத்தில் சமூக வலைதளங்களால் உருவாகும் உறவுகள் எந்தளவு பலமானது , அப்படி உருவாகும் காதல்களும் எதிர் பால் ஈர்ப்பும் நிஜ வாழ்க்கையில் எந்தளவு பாதிப்பு செலுத்த வல்லது.இது குறித்து தமிழில் அதிக படங்கள் வரவில்லை.காதலர் தினம் போன்ற படங்களில் அவர்கள் விரைவில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்.அது மெய்நிகர் உலகத்திலிருந்து மெய் உலகத்திற்கு வந்துவிடுகிறது.

சமீபத்தில் வெளியான லென்ஸ் திரைப்படம் இப்படி மெய்நிகர் உலகில் உருவாகும் உறவுகளும் அது நிஜ வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்பையும் ஒரளவு தீவிரத்துடன் பேசுகிறது.சமூக வலைதளங்களில் புழுங்கும் போது உருவாகும் நமது ஆளுமையும் நிஜ வாழ்க்கையில் இருக்கும் நமது ஆளுமையும் முரணாக கூட இருக்கலாம்.பல நேரங்களில் அது முரணாகத்தான் இருக்கிறது.நீங்கள் நிஜ வாழ்வில் ஒரு போதும் பயன்படுத்தாத வசைச்சொல்லை மிக எளிதாக சமூக வலைதளத்தில் பயன்படுத்துவீர்கள்.உங்களுக்கு அப்போது அதன் தீவிரம் உறைக்காது.நீங்கள் மிக எளிதாக அதை கடந்துவிடுவீர்கள்.ஆனால் உங்களின் வசைச்சொல்லை படிக்கும் எதிர்தரப்பில் இருப்பவர் உங்களை தன் வாழ்நாள் எதிரியாக பாவிப்பார்.நிஜ வாழ்வில் ஒரு வசைச்சொல் எந்தளவு அவரை பாதிக்குமோ அதே அளவு மெய்நிகர் உலகின் வசைச்சொல்லும் அவரை பாதிக்கும்.

காந்தி தனது அந்தரங்க வாழ்வை பகிரங்கமாக வெளிப்படுத்துபவராக இருந்தார்.ஆனால் அது அவரே சொன்னது.வேறு ஒருவர் அவருக்கு தெரியாமல் படக்கருவியை காந்தியின் படுக்கையறையில் வைத்து அதை பத்திரிக்கைகளுக்கு கொடுத்திருந்தால் காந்தியின் சொல்லுக்கு இருந்த வலிமை அதன் பின் இல்லாமல் போயிருக்கும்.அவரது முழுமை சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கும்.அவர் அரசியில் வாழ்க்கையே முடிந்திருக்கும்.

காந்தி தன் அந்தரங்க வாழ்வை பகிரங்கப்படுத்தும் போது அவர் அதை அகங்காரத்தோடு செய்கிறார்.அவர் மேலும் முழுமையானவராக மாறுகி்றார்.மேலும் சத்தியமானவராக ஆகிறார்.அவர் எந்தவித பிறழ்வும் அற்றவராகிறார்.ஆனால் அவர் தன் அந்தரங்க வாழ்வை பற்றி சொல்லும் போதே அது எடிட் செய்யப்படுகிறது என்று நாம் உணர்வதில்லை.அதை அவர் தெரிந்து எடிட் செய்வதில்லை.ஆனால் அது நடக்கிறது.உலகில் எழுதப்பட்டுள்ள அனைத்து அந்தரங்க குறிப்புகளும் செப்பனிடப்பட்டது தான்.மனம் கொள்ளும் அதீத தாவுதல்களை நாம் குறிப்புகளில் சேர்ப்பதில்லை.அதற்கு ஒரு காரணம், அது நடந்த விதம் , அதை பகிரங்கமாக முன்வைக்கிறேன் என்கி்ற அகங்காரம் ஆகியவற்றோடுதான் அதை செய்கிறோம்.

ஆனால் உங்களின் படுக்கையறை காட்சி உங்களின் அனுமதியின்றி செப்பனிடுதல் இன்றி பலரின் பார்வைக்கு சென்று சேரும் போது நாம் துணுக்குறுகிறோம்.நாம் வண்புணர்வுக்கு உள்ளானது போல் உணர்கிறோம்.ஒரு கூட்டு வண்புணர்வுக்கு உள்ளானவர் கொள்ளும் அதே அவமானத்தை கொந்தளிப்பை திருடப்பட்ட உணர்வை இதிலும் உணர்கிறோம்.அது தற்கொலை வரை கூட ஈட்டுச்செல்கிறது.ஆனால் தன் பக்கத்து வீட்டுக்காரரின் வரவேற்பரையை கூட பார்க்கத் தயங்கும் ஒருவர் இணையத்தில் வெளியாகும் யாரோ ஒருவரின் படுக்கையறை காட்சியை பார்க்கும் போது அந்த தயக்கத்திலிருந்து விடுபடுகிறார்.நமது ஆழ்மன இச்சைகள் , பயங்கள் எந்தவித முகமூடியும் இல்லாமல் சமூகவலைதளங்களில் இணையத்தில் செயல்படுகிறது.எப்போதும் மெய்நிகர் உலகில் பாதிக்கப்பட்டவருக்குத் தான் அது நிஜ வாழ்வில் பாதிப்பை செலுத்துகிறது.அதில் நுகர்வோராக இருப்பவர் அதை எளிதில் கடந்துவிடுகிறார்.

கனடாவில் பள்ளிச்சிறுமி ஒருவள் சமூகவலைதளங்களில் வெளியான தன் நிர்வா புகைப்படங்களால் தொடர்ந்து கேலிக்குள்ளாகி ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டாள். அந்த செய்தியிலிருந்து உருவானதுதான் லென்ஸ் திரைப்படம்.கேலியும் கிண்டலும் ஒரு துரோகத்தை விட நம்மை ஆழமாக பாதிக்கிறது.துரோகம் இழைக்கப்படும் போதும்,கொல்லப்படும் போதும்,பழிவாங்கப்படும் போதும் நீங்கள் எதிர்தரப்புக்கு நிகரானவராக இருக்கிறீர்கள்.கேலிக்கு கிண்டலுக்கு உள்ளாகும் போது நீங்கள் கீழானவராக மாறுகிறீர்கள்.உங்களின் அகங்காரம் மிகத் தீவிரமாக சீண்டப்படுகிறது.உங்களால் மறுதரப்பை எதிர்த்து ஒன்றுமே சொல்ல முடியாத சூழலில் அந்த இடத்தைவிட்டு விலகுதலும் ஒரு கட்டத்தில் தற்கொலையும் கூட நிகழ்கிறது.

சமூகவலைதளங்களில் உருவாகும் உறவுகள் நிலையற்றவை.ஆனால் அதில் உருவாகும் உரையாடல்கள்,கருத்து பரிமாற்றங்கள்,உணர்வுகள் மெய் உலகத்திற்கு நிகரானவை.லென்ஸ் திரைப்படத்தில் வருபவன் எந்தப் பெண்ணுடனும் நிஜமான உடல்உறவை வைத்துக்கொள்வதில்லை.ஆனால் அவனது மனைவி இறுதியில் அவளிடமிருந்து விலகுகிறாள். வீடியோ கேம் விளையாடும் ஒருவர் தன் எதிரிகளை எளிதாக துப்பாக்கியில் சுடுகிறார்.அத்தனை கொலைகளை செய்து அவர் எதிராளியின் கோட்டையை கைப்பற்றுகிறார்.நிஜ வாழ்வில் அவர் ரத்தத்தை கண்டால் மயங்கி விழுபவராக இருப்பார்.Second life என்றோரு இணையதளம் இருக்கிறது.மெய் உலகம் முதல் வாழ்க்கையாக இருக்கும் போது இந்த இணையதளத்தால் உருவாகும் உலகம் இரண்டாம் வாழ்க்கையாக இருக்கிறது.இதில் நீங்கள் உறுப்பினராகி நீங்கள் விரும்பும் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.இடம் வாங்கலாம்.காதலிக்கலாம்.மதம் மாறலாம்.இதில் காதலித்தவர்கள் நிஜ வாழ்வில் திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் ராதிகா ஆப்தேவின் நிர்வாப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது.ஒரு பத்திரிகையாளர் அவரிடம் இது குறித்து நீங்கள் வருத்தப்படவில்லையா என்று கேட்டார்.அந்தப் படத்தை பார்த்தவர்கள் அதை பகிர்ந்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும் என்று ராதிகா ஆப்தே கூறினார்.அதற்கு கேள்வி கேட்டவர் உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என்று சொன்னார்.ராதிகா ஆப்தே பதிலுக்கு அதை பார்த்தவர்களும் பகிர்ந்தவர்களும்தான் புண்பட வேண்டும் என்று சொன்னார்.பத்திரிகையாளருக்கு அதன்பின் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

அனுராக் காஷ்யப்யின் தேவ்டி திரைப்படத்தில் வரும் பள்ளி மானவி தன்னை புணர்பவன் அதை படம்பிடித்து பகிர்ந்து கொள்ளும் போது துவள்கிறாள்.அவளுடைய தந்தையே அதை வீடியோவை பார்த்தும் விடுகிறார்.அவள் அவரிடம் நீங்கள் எப்படி அதை பார்க்கலாம் என்று கேட்கிறாள்.நீ ஒரு கோழை என்று திட்டி அவரது போலித்தனத்தை பாசாங்கை சுட்டி காட்டுகிறாள்.தன் செயல் ஒரு வகையில் அவரது மகளின் உடலுறவு காட்சியை அவளுக்கு தெரியாமல் அவளது படுக்கையறையில் எட்டிப்பார்ப்பது போன்றதுதான் என்பதை அப்போது தான் அவர் உணர்கிறார்.அவர் தற்கொலை செய்துக்கொள்கிறார்.அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.தனக்கான வாழ்வை கண்டடைகிறாள்.ஆனால் அவள் அந்தக் கேள்வியை கேட்கும் வரை அவரால் தன் தவறை உணர முடியவில்லை.அவர் நிஜவாழ்க்கையில் தன் மகளின் அறைக்கு செல்லும் போது கதவை தட்டிவிட்டு வரலாமா என்று கேட்டுவிட்டு செல்பவராக இருக்கலாம்.ஆனால் இந்த மீறலை அதன் தீவிரத்தை அவரால் முதலில் உணரமுடியவில்லை.மெய்நிகர் உலகில் உங்கள் ஆளுமை மாற்றம் கொள்கிறது என்பது முக்கியமான விஷயம்.நாம் வேறொருவராக மாறுகிறாம்.நமது ஆழ்மன இச்சைகள் பசிகள் குரூரங்கள் கோபங்கள் கோழைத்தனங்கள் பாசாங்குகள் எந்தவித முகமூடியும் இல்லாமல் வெளியில் வருகிறது.அங்கு நீங்கள் அடையாளமற்றவர்.மெய் உலகின் தந்தை மெய்நிகர் உலகில் அந்தப் பெண்ணின் தந்தை இல்லை.அதே நேரத்தில் மெய்நிகர் உலகம் மெய் உலகத்தின் அதே பாதிப்புகளை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுத்துகிறது.அது மற்றொரு உண்மை.பாதிப்பவர் தன் பாதிப்பின் தீவிரத்தை உணராமலும் இருக்கச் செய்கிறது.அடுத்த தலைமுறை இன்றைய தலைமுறையை விட இந்த மெய்நிகர் உலகை எளிதாக கையாளும் என்று தோன்றுகிறது.

(தளம் இதழில் வெளிவந்த கட்டுரை)