சமீபத்திய கதைகள்


சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றி தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.நல்ல கட்டுரை.கதைகளில் தொடக்கம் - முடிச்சு - முதிர்வு என்று இருந்த வடிவம் தொண்ணூறுகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள்,கோட்பாடுகளின் அறிமுகத்திற்கு பிறகு மாற்றம் அடைந்ததையும் இரண்டாயிரத்திற்கு பிறகு அதன் தாக்கம் முடிந்து மறுபடி மரபான கதைவடிவங்கள் திரும்ப வந்துவிட்டதையும் சொல்லியிருக்கிறார்.முக்கியமான அவதானிப்பு.

பரீட்சார்த்தமான கதைகள் வெகுகாலம் நம்மிடம் இருப்பதில்லை என்பது அவற்றை நினைவுகூற நாம் முயலும் போது உணர்கிறோம்.மூளைக்கு சலால் விடும் கதைகள் , புதிரை கண்டுபிடிப்பது போன்ற கதைகள் சில காலம் கழித்து அதன் கவர்ச்சியை இழந்துவிடுகின்றது.காதல் அற்று கொள்ளும் புணர்ச்சி போன்றது.அடுத்த முறைக்கு வேறொரு உடல் தேவைப்படுகிறது.புணர்ச்சியின் இன்பத்தை அசை போட இயலுவதில்லை.

மேலும் கதைகள் எத்தனை எளிமையாக இருந்தாலும் அவை ஒரு தரிசனத்தை முன்வைக்க வேண்டும்.ஒட்டுமொத்தமாக வாழ்வை பற்றிய ஒரு சிறு தரிசனத்தை அந்தக் கதை உருவாக்க வேண்டும்.அசோகமித்திரனின் எல்லா கதைகளிலும் அவரின் வாழ்க்கை நோக்கு இருக்கிறது.சுந்தர ராமசாமியின் எல்லா கதைகளிலும் அவரின் வாழ்க்கை நோக்கு இருக்கிறது.அந்த நோக்கு வெளிப்பட வேண்டுமென்றால் அந்த நோக்கமே கதையை எழுதவதற்கான உந்துதலாக இருக்க வேண்டும்.பஷீரின் எல்லா கதைகளும் ஒரு கதைதான்.ஒரு சிறந்த எழுத்தாளரின் எல்லா கதைகளும் ஒரு கதைதான்.இன்று எழுதுபவர்களில் மிகச் சிலரை தவிர பெரும்பாலானோருக்கு ஒரு வாழ்க்கை நோக்கு இல்லை.அதனால் அவை தரிசனமற்ற வெறும் குறிப்புகளாக எஞ்சிவிடுகின்றன.

மேலும் இன்று எழுதுபவர்களில் மிகச்சிலரை தவிர அநேகருக்கு எந்தத் துறை மீதும் Authority இருப்பதில்லை.இலக்கியம் தவிர்த்து வரலாறு , தத்துவம்,உளவியல்,மருத்துவம்,இயற்பியல் என்று ஏதேனும் ஒரு துறையில் ஆழமான தேடலும் வாசிப்பும் ஒரு எழுத்தாளருக்கு முக்கியம்.அது அவரை சிறந்த எழுத்தாளராக்கும்.



No comments: