டிராகன்






மரப்பலகையில் நீல நிற பாலிதீன் விரிப்பின் மேல் தண்ணீர் தெளிக்கப்பட்ட மல்லிப் பூக்கள்,ரோஜா பூக்கள்.சாம்பல் நிற பூனை மரப்பலகையின் அடியில் சுருண்டு கிடந்தது.அதன் அருகில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் நீரும் பச்சை நிற டம்ளரும்.மேகங்களற்ற வானத்தில் செந்நிற திற்றல்.சூரியனைக் காணோம்.நான் வண்டியை நிறுத்தி அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்றேன்.இரண்டு யுவதிகளும் நான்கு யுவன்களும் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் எளிதாக எடுத்தார்கள்.சிலர் நான்கைந்து எடுப்பதற்குள் சோர்ந்து விட்டார்கள்.எல்லோரையும் எழச் சொன்னார் மாஸ்டர்.அதில் ஒரு பெண் திருமணமானவள் என்று தோன்றியது.மற்றவள் கல்லூரி பெண்ணாக இருக்க வேண்டும்.மஞ்சள் நிற டீசர்ட்டும் கறுப்பு நிற டிராக் பேண்ட்டும் அணிந்திருந்தாள்.கூரான நாசி.காதில் கறுப்பு நிற கம்மல் போட்டிருந்தாள்.டீ சர்ட் வியர்வையில் அவள் உடலோடு ஒட்டியிருந்தது.அழகாக இருந்தாள்.அங்கிருந்த கறுப்பு நிறப் பலகையில் சாக் பிஸால் சுருண்ட டிராகன் வரையப்பட்டிருந்தது.நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்று ஆங்கிலத்தில் புருஸ் லீ சொன்னதாக எழுதப்பட்டிருந்தது.நடு வாக்கு எடுத்து சீவியிருந்தார் மாஸ்டர்.பங்க் வைத்திருந்தார்.காலர் வைத்த சிவப்பு பழுப்பு பட்டைகள் கொண்ட டீசர்ட் அணிந்திருந்தார்.அவருக்கு பின்னால் எனக்கு முன்னால் சிவப்பு நிறத்தில் நீளமான மண் மூட்டை தொங்கிக்கொண்டிருந்தது.ஒரு காலை முன்வைத்து மற்றதை பின்வைத்து தாடைகளை பாதுகாத்து நடுக்கோடு ஒன்றை உருவகித்து நிற்கச் சொன்னார் மாணவர்களை.சில அடவுகளை சொல்லிக் கொடுத்தார்.மாணவர்கள் செய்தார்கள்.அதையே பத்து முறை செய்யச் சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பினார்.நான் வணக்கம் சொன்னேன்.ஒரு நீல நிற பிளாஸ்டிக் நாற்காலியில் மேஜைக்கு அந்தப் பக்கம் அமர்ந்தார்.நான் அவரின் பள்ளியில் சேர விரும்புவாக சொன்னேன்.என்னைப் பற்றி விசாரித்தார்.சொன்னேன்.வகுப்பு காலை ஆறிலிருந்து ஏழரை வரை என்றார்.தொடர்ந்து வாருங்கள் என்றார்.மாதம் எவ்வளவு பணம் கட்டணமாக தர வேண்டும் என்று கேட்டேன்.ஆயிரத்தி ஐநூறு ரூபாய்.நான் குங் பூ கற்க விரும்புகிறேன் என்றேன்.குங் பூ என்று தனியாக கற்றுத் தருவதில்லை.இங்கு ஜித் கூனே டூ என்ற தற்காப்பு கலை கற்றுத்தரப் படுகிறது.அதில் விங் சூன் குங் பூவும் அடங்கும்.இது புருஸ் லீ நெறிப்படுத்தியது.மேலும் எந்த ஒரு சண்டை முறை மட்டுமே உங்களை காக்காது.உங்களுக்கான முறையை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும்.நீங்கள் இன்றிலிருந்தே தொடங்கலாம் என்றார்.

என்னை ஒரு மெத்தை மீது நிற்கச் சொன்னார்.கை கால் தலை தோள் பட்டைகள், மூட்டுகளை தளர்வாக்கி கொள்ளும் முறைகளை செய்தேன்.உட்கார்ந்து எழுந்தேன்.ஸகிப்பிங் செய்தேன்.இரண்டு கிலோ டம்பள்ஸ் கொடுத்து பயிற்சி செய்யச் சொன்னார்.மற்றவர்களுக்கு சில அடவுகளை சொல்லிக்கொடுத்தார்.கிளம்பும் போது அந்த மஞ்சள் நிற டீசர்ட் பெண்னை பார்த்து புன்னகைத்தேன்.அவள் சிரித்தாள்.கந்தர்வ் என்று சொல்லி கையை நீட்டினேன்.மறுபடி சிரித்து ஒரு கையால் மயிற்கற்றை காதின் இடுக்கில் சொருகி கை கொடுத்து விட்டு சென்று விட்டாள்.அவளின் பெயரை சொல்லவில்லை.

பைக்கை எடுக்க கீழே வந்த போது மாஸ்டரும் வந்தார்.அந்தப் பெண்ணும் வந்தாள்.அவள் தன் சிவப்பு நிற ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்றாள்.நான் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.மாஸ்டர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.அவர் பக்கமாக திரும்பிய போது சூரிய ஒளி கண்ணில் பட்டு கண் கூசியது.ஒரு பழுப்பு நிற நாய் அவரின் வண்டியின் முன்பக்கம் தாவி அமர்ந்துகொண்டது.நாளை காலை சரியாக வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.தலை அசைத்தேன்.

வீடு நோக்கி வண்டி ஒட்டிச் செல்லும் போது ஒரு திருப்பத்தில் வண்டியை வலது பக்கத்திலேயே திருப்பினேன்.ஒரு இன்னோவா வண்டி மோதப் பார்த்தது.பதற்றத்தில் முன் பிரேக் போட்டேன்.வண்டி சாய்ந்தது.கீழே விழுந்தேன்.இன்னோவா வண்டி நிற்காமல் சென்றது.ஒரு ஆட்டோகாரர் நான் விழுந்து எழுவதை பார்த்து புன்னகைத்தார்.வண்டியை நிமர்த்தினேன்.கொஞ்சம் பெட்ரோல் கீழே கசிந்திருந்தது.ஒரு தேநீர் கடைக்கு சென்று வண்டியை நிறுத்தினேன்.எதிரில் இருந்த பூங்காவில் பல பெண்கள், ஆண்கள், வயோதிகர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.அந்தப் பெண் ஏன் பெயரை சொல்லவில்லை என்று புரியவில்லை.அவளின் உள்ளங்கைகள் மிகவும் மெண்மையாக இருந்தன.தேநீருக்கு ஆறு ரூபாய் சில்லறையாக அங்கிருந்த கண்ணாடி குவளை மீது வைத்தேன்.துருப்பிடித்திருந்த கண்ணாடி குவளையின் மேல் மூடியில் விரல் நகம் பட்டு பற்கள் கூசியது.வீடு வந்து குளித்து அலுவலகம் கிளம்பினேன்.உடல் ஒரே நேரத்தில் சோர்வாகவும் புத்துணர்வாகவும் இருந்தது.

மழையில் என் வண்டி நன்றாக கழுவப்பட்டிருந்தது.மழையில் நணைந்துகொண்டிருந்த என் வண்டியை பார்த்ததும் உடல் கிளர்ந்தது.மாமரத்தின் இலைகள் மீது நீர் பட்டு கீழே விழுந்தது.நீர் தேக்கங்களில் சுற்றலைகள் எழும்பின.மெல்ல காற்று வீசியது.அன்று வகுப்புக்கு செல்லலாமா  என்று யோசனையாகவே இருந்தது.வைஷாலி சென்றிருக்கலாம்.சென்ற போது பள்ளி திறந்திருக்கவில்லை.மாஸ்டரை அழைத்த போது பெரும்மழை என்பதால் யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாக சொன்னார்.சாலையை கடந்து இரண்டாவது தெருவிலிருக்கும் தன் வீட்டுக்கு வரச் சொன்னார்.மிகச் சிறய வீடு.ஜெர்கினை கழற்றி வீட்டின் கிரீல் கதவின் மீது போட்டுவிட்டு உள்ளே சென்றேன்.வரவேற்பரையில் மூன்று பேர் அமரக்கூடிய பிரம்பு சோபாவில் அவர் அமர்ந்திருந்தார்.புத்தரின் பெரிய கற்சிலை ஒன்றிருந்தது.ஆங்கில பாடல் இசைத்துக்கொண்டிருந்தது.வெள்ளையும் பச்சையுமான நிறத்தில் பள்ளி உடை அணிந்து கிளம்பி நின்றாள் சிறு குழந்தை.அவளை அழைத்து எனக்கு அறிமுகப்படுத்தினார்.அவள் அவரது தொடையில் சாய்ந்து வெட்கி நின்றாள்.கத்தரி நிற பூக்கள் கொண்ட வெண்ணிற பருத்தி புடவை அணிந்திருந்த பெண், மர மேஜை ஒன்றின் மீது சாப்பாட்டு டப்பாவை நிரப்பிக்கொண்டிருந்தார்.செந்நிற மெண்மையான அவரின் இடையை என் கண்கள் வருடிச் சென்றன.வழுவிச்சென்றன அவரது உதடுகள்.கூர்மையான நாசி.அவரது முதுகில் கூந்தலின் ஈரம்.தொங்கும் காதணி.பெரிய கண்கள்.கழுத்தில் சின்னதாக ஒரு தங்கச் செயின்.நீல நிற பிளாஸ்டிக் வளையல்கள்.தளிர் உடல்.

இவர் தான் என்னிடம் கற்றுக்கொள்ளும் மாணவன் கந்தர்வ் என்றார் மாஸ்டர்.மூன்று மாதங்கள் இருக்குமா என்றார் மாஸ்டர்.இருக்கும் என்றேன்.வரும் போது இவரால் பத்து தண்டால் கூட எடுக்க முடியாது.இப்போது ஐம்பது தண்டால் எளிதாக எடுக்கிறார் என்று சொல்லி சிரித்தார்.அந்தப் பெண் சாப்பாட்டு பையை கொண்டுவந்து டீபாயில் வைத்தவாறு என்னைப் பார்த்து புன்னகைத்தார்.அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார்.என் மனைவி பிரியதர்ஷினி என்றார் மாஸ்டர்.நான் தலையசைத்தேன்.ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிவதாக சொன்னார்.நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் சேர்ந்தாள் , ஆனால் அநேகமாக இந்த மாதத்தில் நின்றுவிடுவாள்.எங்களுடையது காதல் திருமணம் என்பதால் இரு வீட்டிலும் ஆதரவில்லை.குழந்தை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது பார்த்துக்கொள்ள ஆளில்லை.சமயங்களில் இவள் வீடு திரும்ப நேரமாகி விடுகிறது.நானும் நான்கைந்து இடங்களில் பயிற்சி அளிக்கிறேன்.மாலையில் வீட்டில் இருக்க முடிவதில்லை.அதனால் அவள் வேலையை விடப்போகிறாள் என்றார் மாஸ்டர்.குட்டிப் பெண் அவரின் ஃபோனை எடுத்து ரய்ம்ஸை ஒலிக்கவிட்டாள்.காபி கொடுத்தார் பிரியதர்ஷினி.நான் தரையை பார்த்தவாறு வாங்கினேன்.வீட்டிலிருந்தே ஏதாவது செய்ய முயல்கிறேன் என்றார்.நான் பங்குச்சந்தை குறித்து பேசினேன்.அவர் அதில் நிலையான வருமானம் இருக்குமா என்று என் கண்களை பார்த்து ஆர்வமாக கேட்டார். நான் டீபாயில் இருந்த நாளிதழ்களின் மேல் பார்வையை திருப்பி அவரை பார்க்காமல் சரியாக செய்தால் சம்பாதிக்கலாம் என்றேன்.மழை நின்றிருந்தது.கிளம்பினேன்.

அன்று காலை வைஷாலி அழைத்தாள்.நான் வகுப்புக்கு வரவில்லையா என்றாள்.அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.கிளம்பி வகுப்புக்குச் சென்றேன்.இப்போது அடவுகளை எளிதாக செய்ய வந்தது.என்னிடம் சண்டை போட்டவனை தடுத்து தாக்கினேன்.அவன் விழுந்தான்.நடக்க விருக்கும் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள விருப்பமா என்றார் மாஸ்டர்.அந்த ஆர்வம் இல்லை என்றேன்.கிளம்பும் போது பங்குச்சந்தையில் அனுபவம் உண்டா என்று கேட்டார்.பகுதி நேரமாக செய்கிறேன் என்றேன்.தன் மனைவி வேலையை விட்டுவிட்டார் என்றார்.உன்னால் ஏதேனும் கற்றுத்தர முடிந்தால் பார் என்றார்.இரண்டு மூன்று வாரங்களில் சில அடிப்படைகளை கற்றுத் தர முடியும்.அதன்பின் அவரது முயற்சியால் மேற்கொண்டு பயின்றால் சம்பாதிக்க முடியும் என்றேன்.

காலையில் குழந்தையை பள்ளியில் விட்டதும் வந்து கற்றுத்தர முடியுமா என்றார்.அல்லது என் மனைவி வந்து உங்கள் வீட்டில் கற்கலாம் என்றார்.நான் பதினொரு மணிக்குத் தான் அலுவலகம் கிளம்புவேன்.அவர் வீட்டுக்கு வந்தால் எனக்கு எளிதாக இருக்கும் என்றேன்.ஒரு நாள் காலை தன் மனைவியை அழைத்து வந்தார் மாஸ்டர்.சிவப்பு நிற குர்தா அணிந்திருந்தார் பிரயதர்ஷினி.தேநீர் குடித்துவிட்டு கிளம்பினார் மாஸ்டர்.டெக்கினக்கல் மற்றும் ஃபண்டமென்ட்டல் அனாலிஸிஸ் பற்றி சில அடிப்படைகளை சொன்னேன்.அவருக்கு டிமாட் கணக்கு தொடங்கி கொடுத்தேன்.ஒரு பள்ளி குழந்தை போல அவர் எல்லாவற்றையும் குறிப்பேடத்துக் கொண்டார்.

மறுநாள் ஜித் கூனே டூ வகுப்பு முடிந்து பால்கனியில் நின்று செய்தித்தாள் வாசித்திக்கொண்டிருந்தேன்.பிரயதர்ஷினி ஆக்டிவா ஓட்டிக்கொண்டு வந்தார்.மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தார்.அவரை அமரச்சொல்லி விட்டு குளித்து புத்தாடை அணிந்து வந்தேன்.இதுவரையான தரவுகள் இனியான பங்குச்சந்தை பற்றிய ஒரு முன்அனுமானத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.டெக்கினக்கல் அனாலிஸிஸ் அதை தான் முன்வைக்கிறது என்றேன்.கேண்டில்  ஸ்டிக்ஸை எப்படி புரிந்து கொள்வது என்று ஒரு வாரத்திற்கெல்லாம் கற்றார்.ஆர்எஸ்ஐ பற்றியும் பாலிங்கர் பான்டஸையும் எப்படி கவனிப்பது என்று அறிந்துகொண்டார்.தொடர்ந்து அணைத்து செய்திகளையும் வாசிக்கச் சொன்னேன்.மூலப்பொருளின் விலையேற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.தொழில் துறைகள் பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.தரவுகளை எந்தளவு ஆராய்கிறோமோ அந்தளவு சரியான முடிவுகளை நோக்கி நகர முடியும் என்றேன்.அவரை இரண்டு பங்குகள் வாங்கி விற்கச் சொன்னேன்.அவரின் முடிவுகளும் அதற்கான காரணங்களும் தெளிவாக இருந்தன.இரண்டு வாரங்களில் வெகுவாக கற்றுவிட்டீர்கள் என்றேன்.புன்னகைத்தார்.இன்னும் ஒரிரு வகுப்புகள்.போதும் என்றேன்.

அன்று மழை பெய்வது போல இருந்தது.நான் வகுப்புக்கு சென்று திரும்பினேன்.வைஷாலி என்னுடன் வீடு வந்தாள். அவளை முத்தமிட்டேன்.அவளின் வியர்த்த வாளிப்பான உடல் என்னை கிறுகிறுக்கச் செய்தது.அவள் என்னை இறுக அணைத்தாள்.அவளின் டீசர்ட்டை கழற்றச் சொன்னேன்.அவள் சிணுங்கி மறுத்தாள்.நான் வலுகொண்டு கழற்ற முயன்றேன்.அவள் தடுத்தாள்.வற்புறுத்தவும் செல்வதாக சொன்னாள்.கதவு தட்டப்பட்டது.பிரியதர்ஷினி வந்திருந்தார்.வைஷாலி சென்றாள்.சட்டென்று பெருமழை பெய்யத் தொடங்கியது.கத்திரி பூ போட்ட வெண்ணிற பருத்தி உடை அணிந்திருந்தார் பிரியதர்ஷினி.நான் அவரை முதல் முறையாக பார்த்த போது அணிந்திருந்த உடை.இன்று தன் மகளுக்கு பிறந்தநாள் என்றார்.நான் புன்னகைத்தேன்.இன்று நீங்கள் ஐந்தாறு பங்குகளை வாங்கி விற்பனை செய்யுங்கள் என்று சொல்லி அறை சென்று குளித்து உடை மாற்றி வரவேற்பரை வந்தேன்.

தேநீர் தயாரித்து இருவருக்கும் எடுத்து வந்தேன்.அவரின் மேஜையில் ஒரு பிங்கான் கோப்பை வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன்.அவர் மிக கவனமாக பங்குகளின் ஏற்ற இறக்கத்தை கவனித்தார்.தான் வாங்கிய பங்குகளை பற்றி விவரித்தார்.இன்று பிரட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி இருப்பதால் தகவல் தொழில்நுட்ப பங்குகள் எதையும் வாங்கவில்லை.மேலும் மற்ற நாடுகளின் பங்குசந்தைகளும் இறக்கத்திலேயே முடிந்திருக்கிறது என்றார்.நான் அவரை பார்த்தேன்.எனது நாற்காலியை அவரின் நாற்காலி அருகில் கொண்டு சென்று அமர்ந்தேன்.செந்நிற மெண்மையான இடை.வழுவிச்செல்லும் உதடுகள்.அவரின் காதொரம் இருக்கும் மயிர் கற்றை எடுத்து காதின் இடுக்கில் சொருகினார்.சிவப்பு நிற தோடு அணிந்திருந்தார்.அவர் பிங்கான் கோப்பையை எடுத்து தேநீர் அருந்தினார்.மிக நிதானமாக மூச்சை இழுத்து விட்டார்.நான் அவரின் நாற்காலியின் கைப்படியில் என் கைகளை வைத்தேன்.அவர் வாங்கிய பங்குகளின் தொழில் துறைகள் பற்றி சொல்வதை கவனமாக கேட்பது போல அவரின் இடையில் படுவது போல என் கைகளை வைத்தேன்.அவர் என்னை பார்த்தார்.நான் கணிணியை பார்த்தேன்.அவர் ஒன்றும் சொல்லவில்லை.நான் மறுபடியும் அதையே செய்தேன்.அவர் எழுந்தார்.என்னை விநோதமாக பார்த்தார்.குழப்பமாக நின்றார்.அவரின் உடல் வியர்த்தது.  

அவரின் கண்களில் நீரின் கோடுகள். நான் தரையை பார்த்தேன்.அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.மழை நின்றபின் செல்லுங்கள் என்றேன்.அவர் என் பேச்சை பொருட்படுத்தவில்லை.இனி ஜித் கூனே டூ வகுப்புகளுக்கு செல்ல முடியாது என்று தோன்றியது.கணிணியில் தொடர்ச்சியாக போர்ன் வீடியோக்களை பார்த்தேன்.சுயமைதுனம் செய்தேன்.சிறிது நேரம் தூங்கினேன்.மறுபடியும் குளித்து கிளம்பி அலுவலகம் போனேன்.வண்டியை எடுக்காமல் ஆட்டோவில் சென்றேன்.அலுவலகத்தில் எந்த வேலையும் செய்யாமல் கணிணியை வெறித்துப் பார்த்தேன்.

இரவு உறக்கம் இல்லாமல் இருந்தேன்.மறுநாளும் காலையில் மழை பெய்தது.வைஷாலி அழைத்தாள்.நான் எடுக்கவில்லை.மறுபடியும் அழைத்தாள்.எடுத்தேன்.வகுப்புக்கு வரவில்லையா என்றாள்.இல்லை என்றேன்.சரி , நான் ஸ்கூட்டியை கொண்டு வரவில்லை.என்னை அழைத்து சென்று என் அறையில் விட்டுவிடு என்றாள்.நான் வந்து அழைக்கிறேன், நீ கீழே வா என்றேன்.நான் வண்டியை நிறுத்தியதும் மாஸ்டரின் நாய் என் வண்டி அருகே வந்து நின்றது.மாஸ்டர் எங்கிருந்தோ ஜம்ப் என்றார் , அது என் வண்டியில் ஏறி உட்கார்ந்தது.நான் பதறிப்போய் கீழே விழுந்தேன்.வைஷாலியும் அவள் அருகில் மாஸ்டரும் இருந்தார்கள்.மாஸ்டர் மேலே வரச் சொன்னார்.வைஷாலியை பார்த்தேன்.அவள் ஒன்றும் சொல்லவில்லை.மேலே சென்றேன்.எல்லோரும் சென்றுவிட்டிருந்தார்கள்.யாருமில்லை.தண்ணீர் குடித்தேன்.நாற்காலியில் அமர்ந்தேன்.நாய் வந்து அவர் அருகில் நின்றது.நான் எழுந்தேன்.என்னையே பார்த்த மாஸ்டர் சட்டென்று வயிற்றில் குத்தினார்.நான் விழுந்து இடது வலதாக சுருண்டேன்.முட்டியை மடக்கி வயிற்றில் கைக்கொண்டு கட்டி உருண்டேன்.கண்களில் நீர் கொட்டியது.நாய் என் அருகில் வந்து குரைத்தது.வைஷாலி நீங்கள் அடிக்க மாட்டீர்கள் என்று சொன்னீர்களே என்று அலறினாள்.என்னருகில் வந்து பார்த்தாள்.முட்டி போட்டு அமர்ந்து என் தலையை தொட்டாள்.காலால் ஒரு எத்து விட அருகில் வந்தவர் அப்படியே விட்டுவிட்டார்.எனக்கு ஏதேனும் அடிபட்டிருக்குமா என்று அழுதாள்.அதெல்லாம் ஒன்றுமில்லை , இன்னும் தீவிரமாக அடித்திருந்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கும்.ஆனால் இப்போது ஒன்றும் பிரச்சனையில்லை.அறையில் சென்று படுக்க வைக்கச் சொன்னார்.உறங்கிவிட்டேன்.

எழும் போது மணி காலை பதினொன்று இருக்கும்.வைஷாலி அருகிலிருந்தாள்.எழுந்து அமர்ந்தேன்.வயிறு வலித்தது.எழுந்து நடந்தேன்.மாஸ்டர் வெளியில் அமர்ந்திருந்தார்.நான் அவரிடம் எதுவும் பேசாமல் வெளியேற சென்றேன்.இனி இங்கு வர வேண்டாம் என்று கத்தினார்.வைஷாலி நீயும் தான் என்றார்.நான் வெளியேறவும் சட்டென்று ஓடி வந்து என் டீசர்ட்டை பிடித்து உன்னால் ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா என்றார்.நான் அவரின் பிடியை தள்ளிவிட்டேன்.எனது பார்வையின் கோளாறை உங்கள் மனைவி முதல் நாளே உணரவில்லையா என்றேன்.அவர் திகைத்து நின்றார்.கிருஷூ , கிருஷூ இங்குதான் இருக்கிறீர்களா என்று மெல்ல கத்தியவாறு பச்சை நிற சுடிதாரில் அவரது மனைவி அந்த நேரத்தில் அங்கு வந்தார்.என்னை பார்த்ததும் அதிர்ந்தார்.மாஸ்டர் சலிப்பாக திரும்பினார்.ஏன் காலையிலிருந்து ஃபோனை எடுக்கவில்லை என்று மெல்லிய குரலில் அவரிடம் கேட்டார் பிரியதர்ஷினி.இவன் ஏன் இங்கு இருக்கிறான் என்றார்.பங்குச்சந்தையில் சம்பாதிப்பீர்கள் தானே என்றேன்.பிரியதர்ஷினி தலையை வேகமாக அசைத்து கண்களில் நீருடன் ஓடி என் பார்வையை விட்டு விலகி அறைக்குச் சென்றார்.என்னைப் பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தது நாய்.மாஸ்டர் அதை அதட்டினார்.அது ஒரு ஒரமாக சென்று அமர்ந்தது.நான் கீழே வந்து வண்டியை எடுத்தேன்.வைஷாலி என்னிடம் ஒன்றும் சொல்லாமல் ஆட்டோவில் ஏறிச் சென்றாள்.நான் வண்டியை கிளப்பி தேநீர் கடைக்கு சென்றேன்.திருப்பத்தில் ஒரு சிவப்பு நிற உடை அணிந்த சிறுமி திடீரென்று ஓடினாள்.நான் பதற்றத்தில் முன் பிரேக்கை அழுத்தி கீழே விழுந்தேன்.மழை பெய்யத் தொடங்கியது.என்னைப் பார்த்து ஒரு பாதசாரி சிரித்தார்.நான் வண்டியை நிமர்த்தி தள்ளிக்கொண்டே மழையில் நனைந்துவாறு வீட்டை நோக்கி நடந்தேன்.

(காலச்சுவடு இதழில் பிரசுரமான கதை)