இந்த வருடம்







இந்த வருடம் மகன் பிறந்தான்.அவன் பிறந்தபோது பெரிய பரவசம் ஒன்றும் இல்லை.ஆனால் இப்போதெல்லாம் அவன் சிரிப்பதை பார்க்கும் போது மனதை ஏதோ செய்கிறது.ட்ரி ஆப் லைப் மற்றும் மிரர் படங்களை மறுபடி பார்த்தேன்.என் மகன் சார்ந்து ஏதேதோ புரிதல்கள்.மேலும் இந்த வருடத்தில் அறுத்துகொண்டிருந்த முள் ஒன்று மனதை விட்டு விலகிச்சென்றது.அது அளித்த விடுதலை மிகப்பெரியது.மறுபடியும் ஒரு சலிப்பில் வேலையை விட்டுவிட்டேன்.இந்த சலிப்பு எப்படியோ மறுபடி மறுபடி வந்து சுற்றிக்கொள்கிறது.ஒரு வழியாக அதிலிருந்து மீண்டுவிட்டேன்.அடுத்த வருடத்தில் வேலை கிடைத்துவிடும்.இனி அநேகமாக நானாக வேலையை விட்டு நீங்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.

மூன்று சிறுகதைகள் எழுதினேன்.ஒன்றை என் வலைதளத்திலேயே பிரசுரம் செய்தேன்.மற்றது தளம் இதழில் வந்தது.ஒன்றை காலச்சுவடு இதழுக்கு அனுப்பினேன்.பிரசுரமாகும் என்று நினைக்கிறேன்.நிறைய வாசிக்கவில்லை.மொத்தமே பத்து புத்தகங்கள்தான் வாசித்திருப்பேன்.சில கவிதைகள் எழுதினேன்.வீடு திரும்புதல் , சர்தான் கவிதைகள் நன்றாக வந்தது.ரஜினிகாந்த் பற்றி எழுதிய சலிப்பு என்ற கட்டுரை பரவலாக வாசிக்கப்பட்டது.தொடர்ந்து எழுத வேண்டும் , வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.வாசிக்கும் போது எழுதும் போது மட்டுமே நிறைவாக இருக்கிறது.வாசிப்பதும் அது சார்ந்து சிந்திப்பதும் அது சார்ந்து எழுதுவதும் என்று இருக்க முடியுமென்றால் அது நல்ல மனநிலை.ஒரு நல்ல குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.இதுவரை எடுத்த குறும்படங்கள் மூலம் அடைந்த புரிதலில் முக்கியமானது நம்மால் பார்வையாளனின் கலாச்சார மனதோடு ஒர் உரையாடலை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான்.எனது இதுவரையான குறும்படங்களில் அதை நான் செய்யவில்லை.மனிதனுக்கு மரணமில்லை என்ற ஒரு கட்டுரை எழுதினேன்.கிட்டத்தட்ட அதே கருத்தை கொண்ட ஒரு குறிப்பை பேஸ்புக்கில் செல்வராகவன் பற்றி எழுதினேன்.இது ஏதோ ஒரு வகையில் வாசிப்பவர்களை பாதிக்கிறது.அப்படி அதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.ஆனால் மரணம் பற்றிய மனித மனதின் புதிரும் ஆர்வமும் நமக்கு ஒரு தரிசனத்தை விட முக்கியமானதாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.குறும்படம் எடுக்கவும் செலவாகிறது.கேமிரா படத்தொகுப்பு படப்பிடிப்பு தளம் இவைதான் அதிக பணத்தை எடுத்துக்கொள்கிறது.ஆனால் ஒரு படத்தை எடுக்கும் போது உருவாகும் பரவசத்திற்கு இணை வேறில்லை.அதற்காகவே இயக்கலாம்.சந்தர்ப்பம் உருவானால் அவசியம் எடுப்பேன்.இப்போது குறும்பட அலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.அதை ஒரு திரைப்பட மாதிரியாக மட்டுமே செய்கிறார்கள்.ஆனால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன்.யார் பார்த்தால் என்ன,யார் வாசித்தால் என்ன.அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் நமக்கு தெரிந்தவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும்.அவ்வளவுதான்.பார்ப்போம்.


No comments: