தரிசனம்




ஐநூறு ஆயிர ரூபாய் நோட்டு விவகாரத்தின் ஊடாக பல்வேறு அறிவுஜீவிகள் கிராம பொருளாதாரம் சார்ந்து பல்வேறு கருத்துகளை முன்வைக்கிறார்கள்.பொதுவாக சூழியல்,விவசாயம்,கிராம பொருளாதாரம் பற்றி பேசும் போது அங்கே நாம் சாதிய அடுக்குகளை பற்றி பேசுவதில்லை.நெசவு,குயவு,விவசாயம் மற்றும் கிராம பொருளாதாரம் சார்ந்த தொழில்கள் நிலைபெற வேண்டுமென்றால் இங்கே சாதி எப்போதும் போல இருக்க வேண்டும்.கிராம பொருளாதாரம் பெரிய அளவில் முன்னேற வேண்டுமென்றால் நாம் முதலில் நமது கல்வியை நிறுத்த வேண்டும்.நகர் சார்ந்த வேலைகளுக்கு செல்லவே நமது கல்லி முறை இருக்கிறது.கல்வி இல்லையென்றால் தந்தையின் வேலையை மகன் செய்ய வேண்டும்.அவன் ஒரு போதும் பெரிய மூலதனத்தை உருவாக்க முடியாது.தனக்கென்று தொழிலை உருவாக்க முடியாது.அப்படியென்றால் சாதிய அடுக்குகள் அப்படியே இருக்கும்.

இது இருக்க கூடாது என்றுதானே அம்பேத்கர் கல்விசாலைகளையும்,தொழில்சாலைகளையும்,பெரிய அணைகளையும் ஆதிரத்தார்.மறுமுனையில் காந்தி கிராம பொருளாதாரம் பற்றி பேசினால் சாதி வருகிறது என்று தானே உயர் சாதிகள் குற்றவுணர்வு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.அதனால்தானே அவர்களை ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் செய்த வேலைகளை செய்யச் சொன்னார்.ஆனால் காந்தி நினைத்து போல எந்த மாற்றமும் வரவில்லை.ஆனால் அம்பேத்கர் முன்வைத்த கல்லி,தொழில்துறை என்ற திசையில் தான் இன்று நாடு சென்றுகொண்டிருக்கிறது.

இன்று மோடி தலைமையிலான அரசை விமர்சிக்கும் போது தேசம் அரசு மதம் எல்லாம் ஒன்றாகிறது என்கிறார்கள்.வலதுசாரி அரசு என்பதே தேசத்தையும் மதத்தையும் ஒன்றினைப்பதுதானே.இன்று இந்தியா ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி சொல்வதை கேட்டு நடக்கிறது என்கிறார்கள்.இன்று உலகில் எந்த ஒரு நாடாவது கிராம பொருளாதாரம் சார்ந்து இயங்குகிறதா.இன்றைய சூழலில் ஒரு நாடு தனக்கென்று தனித்த பொருளாதார கொள்கைகளை வகுத்து கொள்ள இயலுமா.அப்படி கிராம பொருளாதாரத்தை முன்வைத்து ஒர் அரசு இயங்குமென்றால் அந்த அரசு சாதியத்தை முன்வைக்கிறது என்று விமர்சிக்கப்படாதா.உலகு செல்லும் திசையில் செல்லாமல் நம் மக்கள் முடக்கப்படுகிறார்கள் என்று சொல்லாமாட்டார்களா.

இங்கு கிராம பொருளாதாரம்,சூழியல்,விவசாயம் என்று பேசுபவர்கள் இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் தங்கள் கோட்பாடுகளை முன்வைக்க வேண்டும்.கல்லியிலிருந்து சாதியிலிருந்து உலக பொருளாதார சூழலிலிருந்து அண்டை நாடுகளூடனான உறவுகளிலிருந்து என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு அவர்கள் மாற்று பொருளாதாரம் சார்ந்த எண்ணங்களை முன்வைக்க வேண்டும்.அப்படி இல்லாமல் தேசம் என்பதே கற்பிதம் என்று உளறினால் உலகம் என்பதே கற்பிதம் என்று சொல்லலாம்.அத்தகைய உரையாடல் எங்கும் கொண்டுசெல்லாது.உங்கள் உரையாடலில் ஒரு தரிசனம் இருக்க வேண்டும்.

உதாரணமாக டி.ஆர்.நாகராஜ் தன்னுடைய எரியும் பாதம் புத்தகத்தில் கிராமம்Xநகரம்,சாதிகள்,தொழில்மயம்Xவிவசாயம்,காந்திXஅம்பேத்கர் என்று பல்வேறு முரண்களை தொடர்ந்து பேசுகிறார்.அதன்மூலம் இந்தியா பற்றிய தெளிவான சித்திரத்தை முன்வைக்கிறார்.அவர் தன் வாதங்களை அதன் மேல் வைக்கிறார்.இத்தகைய பார்வை இங்கே எழுதுபவர்களிடம் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் மட்டுமே ஏதேனும் ஆராக்கியமான நகர்தலை அது உருவாக்கும்.மேலும் இத்தகைய விஷயங்களை பேசுபவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள்.அவர்களின் மகன்கள், மகள்கள் எங்கு படிக்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள், அவர்கள் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்களா என்பதையும் அவர்களே பரிசீலிக்க வேண்டும்.இங்கு உண்மையில் டி.ஆர்.நாகராஜ் போன்ற அறிவுஜீவி இல்லை.அப்படி ஒருவர் உருவாகி வந்தால் அவர் முக்கிய உரையாடல்களை முன்வைக்கலாம்.

No comments: