உருளும் பாறை




ஜெயமோகன் அழுக்கு படிந்த கண்ணாடி என்ற கட்டுரையில் காமம் ,குரோதம், மோகம் ஆகிய அழுக்குகள் நீங்கி பார்த்தால் கண்ணாடியில் பிம்பம் சரியாக தெரியும் என்கிறார்.ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் (இங்கனைத்திலும் இறை உறைகிறது) என்ற நிலை தான் அது என்று ஒரு துறவி அதனை விளக்குகிறார்.ஆல்பர் காம்யூவின் சிசிபஸின் தொன்மம் கட்டுரைத் தொகுப்பில் சிசிபஸ் ஒரு உருளும் பாறையை மலை உச்சிவரை கொண்டு செல்ல வேண்டும்.அங்கிருந்து மறுபடி அதை உருள விட வேண்டும்.பின்னர் கீழே சென்று அதை மறுபடியும் மேலே உருட்டிக் கொண்டு வர வேண்டும்.இப்படி தொடர்ச்சியாக எந்த முடிவும் இல்லாமல் அதை அவன் செய்ய வேண்டும்.இதில் சிசிபஸ் அந்த உருளும் பாறையை மறுபடியும் மேலே கொண்டுவர தனியாக கீழே இறங்குகிறான்.அப்போதும் அவனுடன் அந்த பாறை கூட இல்லை.மறுபடியும் அது கீழே தான் செல்லும் என்பதையும் அவன் அறிவான்.

இது சுத்த அபத்த செயல்பாடு.ஆனால் அவன் அதை செய்தாக வேண்டும்.வேறு வழியில்லை.இப்போது அவன் முன் இரண்டு வழிகள் இருக்கிறது.ஒன்று அவன் தற்கொலை செய்துக் கொள்ளலாம்.அல்லது கீழே சென்று மறுபடி அதை உருட்டி மேலே கொண்டு வரலாம்.அவன் தற்கொலை செய்துக் கொள்வதில்லை.மாறாக அவன் இந்த அபத்தத்தை முழுவதுமாக உணர்ந்து கீழே செல்கிறான்.அப்போது அவன் என்ன உணர்வான்.அந்த கூர்மையான வெயிலில் வியர்வை பிசுபிசுக்க அவன் அந்த அபத்த பந்தை எட்டி உதைத்து கீழே செல்வது அற்புதமான காட்சி.இதோ அபத்தமே நான் உன்னை அங்கீகரிக்கிறேன்.நான் உன்னை பிரக்ஞைபூர்வமாக உணர்கிறேன்.ஆனால் நான் ஒரு போதும் உன்னை நினைத்து சோர்ந்து போய் அமர்ந்துவிடப் போவதில்லை.ஒரு போதும் தற்கொலை செய்துக் கொள்ள போவதில்லை.நான் உன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்வேன்.இதுவே என் இருத்தல் செயல்பாடு என்கிறான் சிசிபஸ்.சிசிபஸ் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றே நாம் கருத வேண்டும் என்று அந்தக் கட்டுரையை முடிக்கிறார் காம்யூ.

ராஜீவ் கொலை வழக்கில் தன் இளமையை முழுமையாக இழந்து நிற்கும் பேரறிவாளன் இந்த அடிப்படையில் தான் வாழ்வை சந்திக்க முடியும்.தன் ஆண் உடலில் இருக்கும் பெண் தண்மை புரிந்துக்கொண்டு அதை தனது அடையாளமாக அறிவிக்க இயலாமல் திணறும் மனிதன் அபத்தமாகத்தான் வாழ்வை எதிர்கொள்வான்.தன் அதுவரையான உழைப்பும் கனவும் கண்ணீரும் அர்த்தமற்று போகும் புதல்வனின் மரணத்தில் ஒரு தந்தை வாழ்வின் அபத்தம் முன் கையறு நிலையில் தான் நிற்க முடியும்.தன்னை முழுமையாக சிதறடித்து விடக்கூடிய அவமானத்தை எதிர்கொள்ளும் மனிதன் வாழ்வை அர்த்தமுள்ளதாக பார்க்க முடியாது.நாம் ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று அவர்களிடம் நாம் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.அது அநீதியும் கூட.

வாழ்வின் அபத்தம் முன் கையறு நிலையில் நிற்பவனிடம் அதை எதிர்கொள்ளும் பிரக்ஞையை சிசிபஸின் தொன்மம் கட்டுரை அளிக்கிறது.சிசிபஸ் தனியாக அந்த உருளும் கல்லை நோக்கி செல்லும் போது அவனைப் போலவே வேறொருவனுக்கும் அதே பணி அளிக்கப்பட்டிருக்கிறது எனக் கொள்வோம்.இருவரும் வாழ்வின் அபத்தத்தை பிரக்ஞை பூர்வமாக உணர்ந்து அதை எதிர்த்து கிளர்ச்சி செய்கிறார்கள்.கிளர்ச்சி என்றால் கொடி தூக்குவது இல்லை.மலை உச்சியிலிருந்து கீழே செல்வதுதான்.இப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவானால் அங்கு மானுட நேசமும் அன்புமே மலரும்.ஒரு வகையில் இந்த அபத்தத்தை உணரும் தருணம் , அதை பிரக்ஞைபூர்வமாக எதிர்கொள்ளும் கிளர்ச்சி, அதன் ஊடாக மலரும் நேசம் ஆகியவற்றைத் தான் காம்யூ மறுபடி மறுபடி சொல்கிறார்.இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்தால் அதை ஒரு முழுக் கோட்பாடாக அவர் உருவாக்கியிருக்கலாம்.

ஒரு அர்த்தமற்ற வேலையை காலையிலிருந்து மாலை வரை செய்து வீடு சென்று திரும்பி அடுத்த நாள் காலை மறுபடி அதே அர்த்தமற்ற வேலையை செய்ய கிளம்பும் தருணம் சிசிபஸ் தருணம் தான்.உங்களை குதறிப்போட்டு கீழே விழ வைத்து பல்லிளிக்கும் சமூகத்தின் முன் அடுத்த நாள் சென்று அமர்வதும் சிசிபஸ் தருணம் தான். துறவு ஒருவகையில் சாகச மனநிலை.தொடர் ஓட்டங்களும் சறுக்கல்களும் அலைச்சல்களும் கீழ்மையும் தீமையும் சிதறலும் பற்றும் பரிவை தேடும் கரங்களும் கொண்ட வாழ்வில் அத்தகைய மனநிலை சாத்தியமே இல்லை என்று தான் தோன்றுகிறது.

சிசிபஸின் தொன்மம் என்ற தொகுப்பில் காம்யூ தன் நிலைப்பாட்டை முன்வைக்க ஒரு பெண் பித்தனையும் , ஒரு நடிகன் பாத்திரத்தையும் விளக்குவார்.இரண்டுமே காம்யூதான்.அத்வைத தரிசனங்கள் அல்லது அதுபோன்ற பிற வேதாந்த தரிசனங்கள் முன்வைக்கும் மனநிலை எத்தகைய வாழ்க்கை முறையில் சாத்தியம் என்று தெரியவில்லை.ஆனால் உங்களால் உங்கள் வாழ்க்கை முறையில் சாத்தியமாக்கிக் கொள்ள இயலாத வாழ்க்கை தரிசனம் எந்த வகையில் உங்களுக்கு உதவும்.தெரியவில்லை.இருத்தலியவாதம் கேலிக்குள்ளாவது இயல்புதான்.ஏனேனில் அது ஒருவகையில் புலம்பல் கூட.லெவி ஸ்ட்ராஸ் அதை பெட்டிக்கடைகாரியின் தத்துவம் என்கிறார்.

ஒரு சமூகத்தின் தனிமனிதர்கள் ஏதேனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைப்பாக்கம் பெறுவதும் அந்த தனிமனிதர்களின் சிக்கல்கள் உண்மையில் அமைப்பின் சிக்கல்கள் என்று உணர்வதும் அதை எதிர்கொள்வதும் போரிடுவதும் வெல்வதும் சரியே.ஆனால் அது ஒரு போதும் ஒரு தனிமனிதனின் துயரத்தை பாடாது.அங்கே ஒரு மனிதன் எண்ணாக மாறுகிறான்.ஒரு புள்ளியியல் விவரனையின் வரைவாக உருக்கொள்கிறான்.ஆனால் அந்த பெளதீக மனிதன் ஆசைகளும் குழப்பங்களும் அச்சமும் காதலும் காமமும் பற்றும் வெறுமையும் என வாழ்வை வழக்கம் போலவே எதிர்கொள்கிறான்.அங்கே அமைப்பு அவனுக்காக வந்து நிறகப் போவதில்லை.அப்போது அவன் சிசிபஸூடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.அவன் துறவு கொண்டால் ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று சொல்லவும் கூடும்.   


No comments: