உறைந்துபோன நேரம் - ஆத்மாநாம் கவிதைகள்


ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியின் மிரர் படத்தில் ஒரு காட்சி


நாம் எல்லோரும் நாகரீகக் குகைவாசிகள்.நாம் நமது அறைகளில் செளகரியமாக இருக்கிறாம்.புத்திசாலித்தனத்தோடு இருக்கிறோம்.அந்த அறையில் அமரந்து கொண்டு மலைகளை பற்றியும் மரங்களை பற்றியும் பூச்செடிகளை பற்றியும் கவிதைகள் எழுதலாம்,எழுதுகிறோம்.

நாம் நமது புத்திசாலித்தனங்களை நமது தோற்றங்களை விடுத்து அறைகளை விட்டு வெளியே நிர்வாணமாய் நீரலைகள் கரைகளிலே வந்து நின்றாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.நாம் நமது புறவுலகாக இருக்கும் அறைகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டோம்.இப்போது அறைகள் இல்லை.நாம் இருக்கிறோம்.நானும் நீங்களும் இருக்கிறோம்.

நாம் நம்மை களைய யத்தனிக்கிறோம்.காக்கை குருவி எங்கள் ஜாதி , நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்கிறோம்.வானில் பறக்கும் புள்ளெலாம் நான் என்ற அத்வைத தரிசனத்தை அடைகிறோம்.மனம் வெள்ளைத்தாளை போல காலியாக வெறுமையாக அழகாக தெளிவாக இருக்கிறது.ஆனால் சட்டென்று பசி எடுக்கிறது.பசி எடுத்தவுடன் அதுவரை அறைவாசிகளாக இருந்த நாம் சோற்றை பங்கிட்டு கொள்கிறோம்.அப்போது வெள்ளைத்தாளான மனத்தில் கோடு விழுகிறது.குறுக்கும் நெடுக்குமாக நிறைய கோடுகளை பார்த்தப்பின் அந்த வெள்ளைத்தாளான மனத்தில் நமக்கு தெரியாமலே முன்பே கோடுகள் இருந்தன என்பதையும் கவனிக்கிறோம்.இப்போது நாம் நம்மை களைவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை அறிகிறோம்.அப்போது சாக்கடை நீரில் வளர்ந்த ஒரு எலுமிச்சைச் செடியின் கனிகள் பெரிதாகவும் புளிப்புடனும் தானிருக்கும், ஆனால் அதில் சற்று சர்க்கரையை சேர்த்து அருந்தினால் நல்ல பானகம்தான் என்று களைக்க இயலாத நானையும் அதே நேரத்தில் நம்மை எப்படி பயண்படுத்திக்கொள்வது ,பண்படுத்திக்கொள்வது என்பதையும் தெரிந்துகொள்கிறோம்.

நாம் நம்மை களைக்க இயலாத போதும் எதையாவது செய்யக்கூடும்.நாம் இருவரும் முன்னர் பிணக்கு கொண்டு நான் என்னுடைய அறைக்கும் நீங்கள் உங்களின் அறைக்குமாக சென்றாகிவிட்டது.இப்போது அறையை விட்டு வெளியே வந்து எவரெஸ்ட் உச்சியில் இருக்கிறோம்..நான் என்னை பற்றியும் நீங்கள் உங்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.நமக்கு மத்தியில் திடமாய் ஒரு பனிக்கட்டி உருவாகி விட்டது.வெள்ளைத்தாளான மனத்தில் கோடு இருக்கலாம்.ஆனால் பெளதீக பனிக்கட்டி எதற்கு.பனிக்கட்டியின் ஒரு முனையை நான் உடைக்கிறேன்.மறுமுனையை நீங்கள் உடையுங்கள்.நம் இருவர் மத்தியிலும் இப்போது ஒரு சமத்துவம் உருவாகுகிறது.நம்மிடையே மகிழ்ச்சி பரவுகிறது.அப்போதுதான் நாம் இருவரும் இதற்கு முன்பே சந்தித்து இயக்கங்கள் பற்றி பேசியதன் நினைவு வருகிறது.இப்போதுதான் நம் இருவருக்கும் இருப்பது ஒரு இயக்கம்தான் என்று புரிகிறது.இந்த இயக்கத்திற்கான பெயரும், இயக்கத்திற்கான தலைவரும் தானே பின்னாளில் உருவாகும் என்பதையும் புரிந்துகொள்கிறோம்.இப்போது அதை பற்றி கவலைப்படாமல் செயல் புரியலாம் என்றும்.

அறைகளை விட்டு வந்து நம்மால் நம்மை களைய முடியாவிட்டாலும் ஒன்றாக இணைந்து தலைவரும் பெயருமற்ற இயக்கமாக ஒன்றாகிவிட்டோம்.இப்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும்.என்ன செய்யலாம்.ஆபாச உடலசைவுகளை ஒழித்து சுத்தமாக முத்தம் முத்தத்தோடு முத்தம் என்று முத்த சகாப்த்தத்தை துவங்கலாம்.பற்றிக்கொண்ட நகரம் எரிந்து அஸ்தியான பின் மூன்றாம் கட்டத்திலோ நான்காம் கட்டத்திலோ மீண்டும் மக்கள் உயிர்த்துக் கொண்டு தங்களுக்கு இடம் தேடி அலைவர் , அதற்கான இடமொன்றை தேடலாம்.நாளை நமதே என்ற கூக்குரல் எழுப்பலாம்.அண்டை வீட்டானுடன் பேசலாம். தெருவிளக்குகள் காலையில் கண்ணுக்குத் தெரியாத தொலைவுக்கு சென்று விடுகின்றனதான் என்றாலும் தெருவிளக்குகள் ஆகலாம். தெரு விளக்காகி இரவை பாதுகாக்கலாம்.உலகின் மண்புழுக்கள் ஆகலாம்.குளிர்க்கண்ணாடிகளை கழற்றி வைக்கலாம்.அக்கணத்தின் உண்மைகள் கொண்டதாய் இந்த உலகை காணலாம்.ஏரிகளாக மாறலாம்.கவிதைத் தொகுப்பைத் தூக்கியெறிந்து சாலையை பார்க்கலாம்.இயந்திரங்கள் போல வளர்க்கப்பட்ட எலும்புக்கூடுகள் உலவும் உலகில் ஏதாவது செய்யலாம்.நம் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான், நம் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள், நாம் வேடிக்கை பார்க்காமல் ஏதாவது செய்யலாம், ஆத்திரப்படலாம், கோபப்படலாம், குண்டர்களின் வயிற்றை கிழிக்கலாம்.அல்லது மக்களிடம் விளக்கலாம், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் கலைவதை பார்த்தபின் அவர்களை வேசியின் மக்களே என்று கூவலாம்.பிச்சைகாரனாய்ப் போய் கத்தலாம்.நம் கத்தல் பெருவெளியைக் கடக்கலாம்.மூக்கணாங்கயிற்றுடன் பிணைத்திருக்கும் கயிற்றை அவிழ்த்து இருப்பிடம் விட்டு நகரலாம்.குறைந்தபட்சம் பேனாவின் முனையின் உரசல் கேட்கும் வகையில் எழுதலாம்.அவர்களை இவர்களை உவர்களை எல்லாம் அறிந்து கொள்ளலாம்.எல்லோரும் பஸ்ஸில் போகலாம்.நானும் நீயும் ஒன்றுதான் என்பதை உணரலாம்.இவ்வளவும் சாத்தியம்தான்.

சரி.புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை.கருத்து பற்றிக்கொண்டு புரட்சி வெடித்தது.இன்றைய உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தும் விட்டது.ஆனால் மறுபடியும் நாம் பழைய உலகத்தையே பார்க்கிறோம்.மறுபடியும் நாம் அனைவரும் நமது அறைகளில் அமர்ந்துகொண்டு நமது புத்தகங்களை மட்டும் வாசிக்க ஆரம்பிக்கிறோம்.நம்மை பற்றி மட்டும் பேசுகிறோம்.புரட்சி இறந்துவிடுகிறது.தாள்கள் மட்டும் படபடக்கிறது.இனி என்ன செய்வது.அனாவசியக் கேள்விகள் அனாவசிய பதில்கள் என்று எதுவும் இல்லாமல் எதையும் நிரூபிக்காமல் நாம் எல்லோரும் சற்று சும்மா இருப்போம்.இதோ நம் எல்லோரையும் பைத்தியகார விடுதியில் கொண்டு போய் சேர்த்தாகிவிட்டது.அங்கு காலையில் நாம் எல்லோரும் எழுந்து தொழுகை செய்ய வேண்டும்.காலைத்தொழுகை முடிந்தவுடன் நாம் எல்லோரும் போய் ஒழுங்காய் தூங்குவோம்.அவ்வளவுதான் நம் வேலையும் உணவும்.

ஆத்மாநாமின் எல்லா கவிதைகளையும் உள்ளடக்கிய கவிதையாக இந்த ‘உறைந்துபோன நேரம்' கவிதை இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

....
நூல்
குடி
விளக்கு வரிசை
சீப்பு
காகிதம்
ஓலோலம்
புராதன இசை
வழியும் மை
பஸ்ஸூக்குள்
ஊர்ந்து செல்லும்
மண் புழு
பேனா
சிகரெட்
காலம்
சென்றவரின்
புகைப்படம்
கிழிந்த ப்ளாஸ்டிக்
நகரச் சிதறல்கள்
கிழிந்த ட்ராயர்
நீளமான பை
தேவையான பணம்
பலப்பம்
ஷேவிங் சாமான்கள்
தூக்கு
எழுத்து
கொட்டகை
ஒற்றைக் கம்பளி
பட்டன்
உருண்டைப் பந்து
சூனியத்தில்
முற்றுப்புள்ளி

இந்த கவிதையை என் அனுபவம் சார்ந்து நான் இங்கே  இணைக்கிறேன்.நூல் - காந்தியின் குடில் – குடில்கள் – குடில்களில் விளக்கு வரிசை – குடிலுக்குள் சீப்பு காகிதம் – காகிதம் – புத்தகம் – செல்வத்தை தேய்க்கும் படை – மக்களின் ஒலோலம் – புராதன இசை – இசையில் வழியும் மை – வழியும் மை ஓடும் பஸ் - ஓடும் பஸ்ஸில் ஊர்ந்து செல்லும் மண் புழு – மண் புழு உழவனின் நண்பன் – எழுத்தாளன் சொல்லெர் உழவன் – அவனது பேனா – சிகரெட் – சிகரெட் எரிகிறது – காலம் செல்கிறது – இறந்த காலம் - சென்றவரின் புகைப்படம் – புகைப்படம் கிழிந்திருக்கிறது – கிழிந்த ப்ளாஸ்டிக் நகரச் சிதறல்கள் – கிழிந்த ப்ளாஸ்டிக் – பால்ய காலத்தில் கிழிந்த ட்ராயருடன் நீளமான புத்தக பை – பையில் சில்லறையும் பலப்பமும் – பலப்பம் – வெள்ளை நிறம் – ஷேவிங் லோஷன் – ஷேவிங் செய்ய உபயோகப்படுத்தும் கத்தி – கத்தி – தூக்கு – மரணம் - எழுத்து – எழுத்தாளன் – அறை – உறக்கம் – கம்பளி – உடை – பட்டன் – பட்டனின் உருண்டை வடிவம் – உருண்டைப் பந்து – சூனியத்தில் முற்றுப்புள்ளி.இந்த கவிதையை ஒரு அழகான குறும்படமாக கூட எடுக்கலாம்.அத்தனையும் உறைந்து போன படிமங்களாக காட்சி படுத்தலாம்.

ஆத்மாநாமின் கவிதைகள் அறையை விட்டு வெளியேறுதல் – நான் களைதல் – தலைவரும் பெயருமற்ற இயக்கமாக ஒன்றினைதல்  – ஒன்றினைந்து செயல் புரிதல் என்ற தளத்தில் ஒரு புறம் பயணிக்கிறது.இன்னொரு தளத்தில் ஒன்றினையும் மக்கள் உருவாக்கும் உலகம் எத்தகையதாக இருக்கும் என்ற கேள்வியும் அவருள் இருக்கிறது.காகிதத்தில் எப்போதும் ஒரு கோடு இருக்கிறது என்கிறார்.

இவை இரண்டும் இல்லாத ஒரு தளமும் அவருடைய கவிதைகளில் வருகின்றன.தன் வீட்டில் வளர்க்கும் ரோஜா பதியன்களை மாலையில் சந்திப்பதும் அதை காலையில் மறுபடியும் பார்ப்போம் என்ற நினைவோடு மட்டுமே உறங்கும் தனித்துவிடப்பட்ட மனிதனின் நிலை என் ரோஜாப் பதியன்கள் கவிதையில் வருகிறது.அன்பிற்காக ஏங்கும் ஒரு மனமும் அந்த மனம் தனிமையில் முடங்கி கிடக்கும் சித்திரமும் பதறவைக்கிறது.
ஆத்மாநாம் சொல்கிறார் -

வேலை

உங்கள் காலைத்தொழுகை முடிந்ததா
அவ்வளவுதான் உம் உணவு
ஊர் சுற்றாமல்
ஒழுங்காய்ப் போய்த் தூங்குங்கள்.

சரிதான் , நாம் போய்த் தூங்குவோம்.