அச்சம் தவிர்






பொது மைதானத்தில் தண்டால் எடுத்துக்கொண்டிருக்கும் கிருபாவை சிலர் விரட்டிவிடுகிறார்கள்.அடிவாங்கி வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும் தன் நண்பன் கிருபாவை அடித்தவர்கவகளை சத்யா சென்று தாக்குகிறான்.கிருபாவும் சத்யாவும் பால்ய கால நண்பர்கள்.இருவரின் தந்தைகளும் காவல் துறையில் பணிபுரிவதால் தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் எதிர்எதிர் வீட்டில் இருக்கிறார்கள்.கிருபா துணை ஆய்வாளர் தேர்வுக்கு தன்னை மிகவும் வருத்தி தயார்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில் சத்யா எந்த இலக்கும் இல்லாமல் மதுபானக்கடையில் பொழுதுகளை கழிக்கிறான்.

தன்னை பொது இடத்தில் பலரும் பார்க்கும் நிலையில் சத்யாவை அவருடைய தந்தை செருப்பால் அடிக்கிறார்.மேலும் அவனை கிருபாவோடு ஒப்பிட்டு தரக்குறைவாக பேசுகிறார்.தன்னை அவமானப்படுத்திய தந்தையை அவமானப்படுத்த வேண்டுமென்றால் தான் துணை ஆய்வாளர் ஆவதே வழி என்று கருதுகிறான் சத்யா.அதிகாரத்தில் இருக்கும் தன் உறவினரின் துணையோடு தேர்வில் வெற்றி பெறுகிறான்.ஆனால் துரதரிஷ்டவசமாக தன் முழு கவனத்தையும் அந்த தேர்வில் மட்டுமே செலுத்திய கிருபா தோற்றுவிடுகிறான்.

அஞ்சாதே திரைப்படம் இந்த புள்ளியிலிருந்து துவங்குகிறது.கிருபாவின் தோல்விக்கு யார் காரணம்.கருடக்கொடி என்ற என்.டி.ராஜ்குமாரின் கவிதை தொகுப்பில் "ஆளற்ற ஒரு கூட்டம் துரத்திக் கொண்டிருக்கிறது" என்ற ஒரு வரி வருகிறது.உண்மையில் கிருபாவின் தோல்விக்கு காரணம் ஆளற்ற ஒரு கூட்டம்தான்.யார் ஒருவரையும் குறிப்பிட்டு சொல்லவே முடியாது.தேர்வு முறை , ஊழல், தகுதியற்றவர்களக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் இப்படி நிறைய காரணங்கள்.ஆனால் கிருபா அவை அணைத்தையும் ஏற்கத்தயாராக இல்லை.அவன் தன் எதிர்வீட்டில் இருக்கும் சத்யாதான் தன் தோல்விக்கு காரணம் என்று நம்புகிறான்.அது எளிதானதுகூட.அதன் மூலம் அவனுக்கு ஒரு எதிரி கிடைக்கிறான்.அவனை அவன் திட்டலாம்.கத்தியால் குத்தலாம்.அவமானப்படுத்தலாம்.ஆளற்ற ஒரு கூட்டம் என்ற கருத்தை அவன் ஏற்றால் அவன் நிலைதடுமாறலாம்.அவனால் யார் ஒருவரையும் குற்றம் சொல்ல முடியாது.எதிரி ஒருவனை கைகாட்டி அதன் மூலம் ஏமாற்றப்பட்டவர்களையும் , தோற்றுபோனவர்களையும், கையறு நிலையில் இருப்பவர்களையும் ஒருங்கினைப்பது எளிது.சட்டென்று வன்முறையை சாத்தியப்படுத்தக்கூடிய எளிய தந்திரம் அது.அரசியல் இயக்கங்கள் எப்போதும் கையறுநிலையில் இருப்பவர்களை பார்த்து நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு அவர்களே காரணம் என்று ஒரு கூட்டத்தை சுட்டிகாட்டுகிறார்கள்.அப்படி ஒரு கூட்டத்தை சுட்டிக்காட்டுவதன் மூலமாக இனரீதியாகவோ, மொழிரீதியாகவோ, மதரீதியாகவோ அல்லது தேசம் சார்ந்தோ கையறு நிலையில் இருப்பவர்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்குகிறார்கள்.அந்த வெறுப்பு எப்போதும் வன்முறையாக மாறலாம். வெறுப்பு எங்கும் ஈதர் போல பரவியிருக்கும் நிலையில் ஒரு சின்ன அசைவு, ஒரு சொல், லேசான அடிதடி அல்லது வதந்தி கையறு நிலையில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து கும்பலாக மாற்றிவிடும்.கும்பல் கூடி அழிக்கும்.அத்தகைய கும்பலின் வன்முறையால் பேரழிவுகளை உருவாக்குவதன் மூலம் அந்த அரசியல் இயக்கம் அதிகாரம் நோக்கி நகர்கிறது.கையறு நிலையில் இருப்பவன் அதே நிலையில் தொடர்கிறான்.

அவமானப்பட்டு நிற்கும் கிருபா தன் அவமானத்திற்கு சத்யா தான் காரணம் என்று எந்த சந்தேகமுமின்றி நம்புகிறான்.அதே பகுதியில் இளம் பெண்களை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் பணம் பறிக்கும் தொழில் செய்து வரும் தயா என்பவன் கிருபாவிற்கு மதுபானக்கடையில் அறிமுகமாகிறான்.

ஒரு அரசியல் தலைவன் அதிகாரத்தை நோக்கிய தன் நகர்வுக்காக மக்கள் மத்தியில் வெறுப்பை  உருவாக்குவது போல தயா துணை ஆய்வாளனாகிவிட்ட சத்யா மீதான வெறுப்பை கிருபாவிடம் தீவிரப்படுத்துகிறான்.கிருபா எளிதில் அஞ்சக்கூடியவன்.அவன் தன் முன் இருக்கும் பிரச்சனையை எதிர்கொள்ளும் திராணியற்றவன்.பொது மைதானத்தில் ஒருவன் தன்னை அடித்துவிடும் போது அவன் அதை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை.அவனது நண்பர்களிடம் சொல்லவில்லை.எந்த எதிர்வினையும் செய்யவில்லை.அவன் அஞ்சுகிறான்.அவன் வீட்டிற்குள் சென்று ஒளிந்துகொள்கிறான்.துணை ஆய்வாளராக பொறுப்பேற்கும் சத்யா அந்த வேலையின் யதார்த்தத்தை சிறிது சிறிதாக புரிந்துகொள்கிறான்.அவன் தன் முன் வரும் பிரச்சனையை எதிர்கொள்கிறான்.தன் நண்பனை பொது மைதானத்தில் அடித்துவிடும் ரெளடிகளை திருப்பி அடிக்கிறான்.அது போலவே தன் வேலையில் தன் பாதுகாப்பில் மருத்துவமனையில் இருக்கும் கைதியை தாக்கவரும் ரெளடிகளை எதிர்க்கிறான்.சத்யா அச்சத்தை தவிர்க்கிறான்.கிருபா அச்சத்தை தவிர்க்கவில்லை.சத்யா அஞ்சா நெஞ்சன் அல்ல.ஆனால் அவன் அச்சத்தை தவிர்க்கிறான்.அதன் மூலம் யதார்த்தத்தை எதிர்கொள்கிறான்.கண்களை மூடிக்கொள்வதில்லை.கிருபா கண்களை மூடிக்கொள்கிறான்.அவன் எந்த உண்மையையும் பார்க்க விரும்பவில்லை.துணை ஆய்வாளர் தேர்வில் தோற்றுபோகும் கிருபா இனி என்ன செய்யலாம் என்று சிந்திப்பதே இல்லை.மேற்கொண்டு படிக்கலாம், அல்லது வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம் அல்லது ஒரு பெண்னையாவது காதலிக்க முயற்சிக்கலாம் என்று அவன் யோசிப்பதே இல்லை.முகச்சவரம் செய்து சிகையை அலங்கரித்து நல்ல ஆடைகளை உடுத்தி இருசக்கர வாகணத்தில் கண்ணதாசன் சாலையில் சென்றிருந்தாலே கிருபாவின் வாழ்க்கை மாறியிருக்கும்.ஆனால் அவன் தாடி வளர்த்து வீட்டில் முடங்கிவிடுகிறான்.அவன் முடிந்துவிடுகிறான்.மரணமின்றி அவனுக்கு விடுதலை இல்லை.அந்த விடுதலையை சத்யா அவனுக்கு இறுதியில் அளிக்கிறான்.

சத்யாவின் மீதான வெறுப்பை கிருபாவிடம் சிறிது சிறிதாக தீவிரப்படத்தும் தயா ஒரு கட்டத்தில் தன் செயல்பாடுகளில் கிருபாவை இணையச்செய்கிறான்.ஒரு முறை கிருபா மதுபானக்கடையில் குடித்துக்கொண்டிருக்கும் போது அங்கே வேலை செய்யும் சிறுவனை சத்யா அழைக்கிறான்.அப்போது அந்த சிறுவனை சத்யாவிடம் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறான் கிருபா.இது ஒரு முக்கியமான காட்சி.கிருபா எப்போதும் தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பவனாக இருக்கிறான்.தன்னிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் விலகி அந்த மதுபானக்கடையில் அவன் தன்னை சுற்றிய உலகத்தை பார்த்திருந்தால் தான் தன் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றையும் இழக்கவில்லை என்பதை அறிந்திருப்பான்.அவன் விடுதலை அடைந்திருக்கலாம்.கிருபாவின் பிரச்சனைகள் எளிய தோல்விகளை எதிர்கொள்ள தயங்குவதும், அச்சத்தை தவிர்க்காமல் அதன் விசையில் ஒடுவதும், யதார்தத்தின் முன் தன் கண்களை மூடிக்கொள்வதும், தன்னில் ஒடுங்கிவதும்தான்.

இந்த படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.கிருபாவின் தங்கை பெயர் உத்ரா.உத்ரா நல்ல பெயர்.ஒரு வீட்டில் ஆண் வேலை இல்லாமல் படிப்பு இல்லாமல் முடங்கியிருக்கும் போது அந்த வீடு எப்படி காட்சியளிக்கும் என்று நான் நன்கு அறிவேன்.நான் வேலையில்லாமல் வீட்டில் முடங்கியிருந்த நாட்களை கிருபாவை அவனது தாயும் தந்தையும் ஏதேனும் வேலைக்கு செல்லச்சொல்லி வற்புறுத்தும் காட்சியை பார்க்கும் போது நினைத்துக்கொள்வேன்.வேலை என்பது சம்பாத்தியம் மட்டும் அல்ல.அது ஒரு அடையாளமும் கூட.கிருபா ஒரு வேளை துணை ஆய்வாளராக பொறுப்பேற்று வேலைக்கு சென்றிருந்தால் கூட அவன் தோற்றே போயிருப்பான்.வேலையில் மேல் அதிகாரிகளின் அழுத்தம், பயம் இவைகளே அவனை எளிதில் விழுங்கியிருக்கும்.அவன் எந்த கருணையுமின்றி தான் ஒரு கோழை, கோழை என்பதால் அச்சத்தின் விசையிருக்கும் திசையில் ஒடுகிறேன், நான் அப்படி ஒடாமல் அதை எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவை அடையாத வரை அவனுக்கு மீட்சி இல்லை.ஆனால் அத்தகைய மீட்சி கிடைப்பது சாதாரண விஷயம் இல்லை.அதற்கு அவன் மிகத்தீவிரமாக போராட வேண்டும்.ஆனால் அது அவனுக்கு சாத்தியமடையாமல் போகிறது.இறுதியில் சத்யா அவனை கொல்கிறான்.கிருபாவின் தங்கை உத்ராவை சத்யா திருமணம் செய்துகொண்டு கிருபா என்ற குழந்தையோடு வாழ்வதாக காண்பிப்பதோடு திரைப்படம் நிறைவு பெறுகிறது.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக அமைந்த படம் இது.மிஷ்கின் பல பேட்டிகளில் தான் நந்தலாலா, ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற திரைப்படங்களை எடுக்கவிரும்புகிறேன் என்ற விதத்தில் பேசுகிறார்.அஞ்சாதே திரைப்படத்தில் என்ன பிரச்சனை என்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை.தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மனித மனத்தின் இருட்குகைக்களுக்குள் தீவிரமாக பயணித்த திரைப்படம் அஞ்சாதே.தயா மற்றும் கிருபாவின் கதாபாத்திரங்களே இந்த திரைப்படத்தின் மையம்.ஒநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தோடு ஒப்பிடும் போது எனக்கு அஞ்சாதேவும் சித்தரம் பேசுதடியும் சிறந்த திரைப்படங்களாக தோன்றுகிறது.

படத்தில் தன் மகள் கடத்தப்பட்ட நிலையில் போலீஸ் சொல்வதை கேட்பதா அல்லது தன் பெண்ணை கடத்தி வைத்திருக்கும் கும்பல் சொல்வதை கேட்பதா என்று புரியாமல் தவிக்கும் நரேன் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.அவருடைய குரல் மிகவும் வசீகரமானது.பாலுமகேந்திராவின் குறும்படங்களில் அவரின் நடிப்பை பார்த்திருக்கிறேன்.மிகச் சிறப்பான நடிகர்.மிஷ்கின் விரும்பினாலும் விரும்பவில்லையென்றாலும் அஞ்சாதே அவர் இயக்கிய இயக்கவிருக்கும் படங்களில் முக்கியமானதாக எப்போதும் இருக்கும்.

1 comment:

gunakarthi said...

You are right... anjaathe is a best movie in myskin's career...