என்பதனால்



தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது என்று ஒரு தொழிலாளி சொல்கிறான். இந்த வாக்கியத்தில் என்ன பொருள் கொள்ளலாம். நிர்வாகம் , அரசு தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக கொடுக்கவில்லை என்று கொள்ளலாம். இதை கட்டுடைக்கலாம்.இந்த வாக்கியத்தை சொல்பவன் பெயர் ராஜன்.அவன் ஒரு தொழிலாளி. அவன் சமீபத்தில் அவனுடைய சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கி இருக்கிறான். வங்கிக் கடனில். மேலும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டான்.மோட்டார் சைக்கிள் வேறு வாங்கிக் கொண்டான். அதுவும் கடனில். அவனுடைய வயோதிக அம்மாவிற்கு மருத்துவ செலவு. ஆக தொழிலாளிகளுக்கு சம்பளம் குறைவு என்பது உண்மையில்லை.மாறாக ராஜன் வாங்கிய வீட்டுக்கடன், வண்டிக்கடன் , செய்துகொண்ட திருமணம், அவனுடைய தாய் இவைகளே இந்த வாக்கியத்திற்கான காரணம். ராஜனின் நடவடிக்கைகளால் அவனுக்கு சம்பளம் கட்டுபடியாகவில்லை. இரண்டாவது செய்தி.ராஜன் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த ஊரில் தொழிலாளர்களின் தற்கொலை போன ஆண்டை விட அதிகரித்து உள்ளது என்று ஒரு கணக்கு சொல்கிறது. இதை எப்படி நிர்வாகம் எதிர்கொள்கிறது என பார்ப்போம். ராஜன் தன்னுடைய தகுதிக்கு மீறி கடன் பெற்றார். மேலும் அவர் தனி வாழ்வில் ஒழுக்கமாக இருக்கவில்லை.பாலியல் அறமதிப்பீடுகளை அவர் மீறினார்.இவைகளால் அவருக்கு உண்டான மனநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார்.மற்றபடி நிர்வாகம் தன்னுடைய தொழிலாளர்களுக்கு மனநெருக்கடிகளை சமாளிக்கவே நிறைய செலவு செய்கிறது என ஒரு பட்டியலை நீட்டும். மூன்றாவது செய்தி - நிர்வாகத்தின் மீதும் அரசின் மீதும் சுற்றுச்சுழல் மாசு சார்ந்து புகார் தெரிவிக்கப்படுகிறது. அப்போது அந்த நிர்வாகம் எந்த ஊரில் உள்ளதோ அந்த ஊரில் அது ஒரு பிரகடனம் செய்யும். நாம் சேர்ந்து நமது ஆற்று நீரை சுத்தப்படுத்துவோம் என்று. உடனே புகார் தெரிவித்த அமைப்புகள் வெற்றி வெற்றி என்று சொல்லும். வழக்கு திரும்ப பெறப்படும்.


மேலே சொன்ன விஷயங்களில் முதலாவதை எடுத்துக்கொள்வோம். கடன் வாங்கிக்கொள்ள நம்மை சுற்றி இருக்கும் அமைப்பு,நிர்வாகம், அரசு எல்லாம் தான் ஊக்குவிக்கிறது.ஆனால் இங்கு முக்கிய விஷயம் அதுவல்ல.ராஜன் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது என்ற ஒரு புகாரை எழுப்பும் போது அது புறவயமானதாக இருக்கிறது. அப்படியல்ல அது ராஜனின் பிரச்சனை. அவனது திறமையின்மையால் அவன் அதிக கடன் பெற்று இவ்வாறு அவதிபடுகிறான் என்று அகவயமாக்குகிறது. இரண்டாவது பிரச்சனை இன்னும் பெரிது.தன்னால் சுயமாக ஒரு தொழிலை செய்யவதற்கான அனைத்து வாசல்களையும் அடைத்தப்பின் அவனை ஒரு கைதி போல ஆக்கி அவனை நகருக்கு வரவழைத்து ஒரு பெரிய அமைப்பின் கீழ் தொழிலாளி ஆக்கப்பட்டு சுரண்டப்படுகிறான். உண்மை என்னவென்றால் அவன் சுரண்டப்படுகிறான் என்பது அவனுக்கு தெரியாது. பருண்மை வடிவில் அவனுக்கு எஜமான் இல்லை.ஆனால் அவன் அச்சப்படுகிறான். எதிர்காலத்தின் நிச்சயமின்னை அவனை பயமுறுத்துகிறது. அப்போது ராஜன் நிலப்பிரபுத்துவம் உருவாக்கி கொடுத்த பாலியல் அறங்களை மீறுகிறான். அப்படி மீறுகையில் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறான்.தற்கொலை செய்து கொள்கிறான். இங்கு பிரச்சனை ராஜன் மாத்திரம் அல்ல. இந்த அமைப்பின் பிரச்சனை.முதல் இரண்டுமே மிகப்பெரிய பிரச்சனைகள்.அவற்றை ஆராய்ந்தால் அவன் சார்ந்திருக்கும் அமைப்பு அதில் முக்கிய பங்கு வகிப்பதை நாம் உணர முடியும். இரண்டுமே புறவயமாக அணுகப்பட வேண்டியவைகள். ஆனால் இரண்டுமே அகவயமானதாக , தனிநபருக்கு உரியதாக மாற்றப்படுகிறது. இதுதான் நவீன முதலாளித்துவத்தின் வெற்றி. மூன்றாவது இன்னும் பெரிய விஷயம்.இதை நமது நவீன முதலாளித்துவம் மிக அழகாக கையாள்கிறது. உதாரணத்துக்கு காந்தியர் ஒருவர் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுவதால் அதை எதிர்த்து பெரிய மக்கள் போராட்டம் நடத்துகிறார் என வைத்துக்கொள்வோம். கொஞ்ச காலம் நம் நிர்வாகமும் , அரசும் அவரை அடக்க பார்க்கும். ஒன்றும் வழியில்லை என்றால் கடைசி ஆயுதம்.இது எங்களால் வந்த பிரச்சனை அல்ல.மாறாக நம்மால் வந்த பிரச்சனை. நாம் தான் சமாளிக்க வேண்டும். நாம் என்பதை அழுத்திச்சொல்லும்.ஆம்.அவரை(காந்தியரை) அழைத்து சுற்றுச்சுழலுக்கு தங்களால் முடிந்ததை தாங்கள் நிச்சயம் செய்வதாகவும் ஆனால் அதை தங்களால் மட்டும் செய்ய முடியாது என்றும் ஆக நாம் செய்வோம் என சொல்லும். முடிந்தால் அந்த காந்தியரை வைத்து ஒரு கருத்தரங்கு நடத்தும். ஊர் கூடி தேர் இழுப்போம் என்று விளம்பரம் செய்யும்.ஒரு வருடம் கழித்து காந்தியர் மெளனமாகி போவார்.

என்பதனால் சொல்லப்படுவது என்னவென்றால் முதலிலேயே மெளனமாக இருந்து விடுவது நலம்.




No comments: