கருணை





ஸ்ரீனிவாசராவ் இறந்துபோனான். ராவ் என்று அவனது நன்பர்கள் அழைப்பார்கள்.வயது முப்பத்தி மூன்று.தாய்மொழி தெலுங்கு.பிறந்து வளர்ந்தது சென்னையில்.வழக்கறிஞராக பனிபுரிந்த காலம் ஒன்று.அதற்கு முன் மூன்று வருடம் துனை பேராசிரியராக இயற்பியல் துறையில் பணி. தாய் தந்தையர் இறந்து போயினர். சகோதரி ஏற்கனேவே திருமணம் நடந்து ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றாள்.ராவ் திருமணம் செய்து கொள்ளவில்லை.அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபட்டது.ஆனால் அதை முன்னெடுக்க யாரும் இல்லாமல் முடங்கிபோனது.சென்னை சோளகார்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி வந்தான்.அட்டைபெட்டி போன்ற பொற்கொல்லர்களின் கடைகளை வேடிக்கை பார்த்து செல்வது வாடிக்கை.வால்டாக்ஸ் ரோட்டில் மாலை நேரங்களில் நடைபயணம் செல்வதுண்டு.

அவன் துனை பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்து சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரி சட்டம் பயில சேர்ந்ததற்கு அவனுக்கும் சில மனித உரிமை அமைப்பை சேர்ந்த தோழர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சட்டம் பயின்று வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டபின் யாரிடமும் ஜூனியராக வேலை செய்யவில்லை.சென்னையில் நாய்களின் தொல்லை பற்றிய வழக்கே அவன் வாதாடிய முதல் பொது நல வழக்கு.பல்வேறு மிருக நல சங்கங்கள் அவனது பொது நல வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்த்து வாதாடின.மிகவும் பிந்திய இருட்டில் இது போன்ற மிருக நல சங்கங்களை சேர்ந்த மிருகனிஸ்ட்கள் தனித்து நடந்து செல்ல வேண்டும் , அப்படி சென்ற பின் நாய்கள் கொல்லப்பட வேண்டாம் என்று அவர்கள் சொல்லும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதாக ராவ் கூறினான்.நீதிபதியின் மனைவி மிக முக்கியமான தெருநாய் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக இருந்த்தால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுபோல பல வழக்குகள் ராவால் வாதாடப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை கடற்கரையில் சிறுவர்கள் விளையாட அனுமதி மறுத்தது,நடிகர் சிவாஜி கனேசன் காந்தி ஒரமாக இருக்கையில் பிரதானமாக சாலையில் நிறுவப்பட்டிருப்பது - இதில் கலைஞர்களுக்கு அங்கீகாரம் அவசியம் தான் என்றும் , ஆனால் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தது அவரா, இவரா என்கிற குழப்பம் வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு வரக்கூடும் என்றும் அதுமட்டுமல்லாமல் வருங்கால சந்த்திகளுக்கே வரக்கூடும் என்று வாதிட்ட போதும் அந்த வழக்கு விசாரனைக்கே ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகிரிப்பட்டது.

ராவ் கடைசியாக வாதாடிய வழக்கில் சென்னையின் குடிசைகளில் வாழும் மக்களை செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளுக்கு மாற்றாமல் நமது ஆட்சியாளர்களை மாற்றினால் சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று அவன் சொன்ன யோசனை கடும் கண்டனத்துக்கு பிறகு நிராகிரிப்பட்டது.ராவ் சில மனித உரிமை வழக்குகளிலும் வாதாடினான்.லோக் அதாலத் மூலம் வந்த வழக்குகளிலும் வாதாடினான்.சில வழக்குகள் வெற்றியும் பெற்றன.முகத்தில் வறிய கோடுகளுடன் பழுப்பேறிய கண்கள் கொண்ட ஒரு மூதாட்டி அவனிடம் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றி தெரிவித்த போது உண்மையில் நெகிழ்ந்துபோனான்.இவர்கள் எத்தனை காலம் கைகூப்பி கொண்ட இருப்பார்கள் என எண்ணிக்கொண்டான்.ஆனால் தொடர்ந்து வேலை செய்த காலத்தில் ஒரு விஷயத்தை புரிந்துகொன்டான்.நீதிபதி ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள்.சில சமயங்களில் சில சமரசங்கள் சாத்தியம்.மற்றபடி நீதிமன்றங்களால் சமூகநீதி சாத்தியமில்லை என்பதை உணர்ந்தான்.மிக புத்துணர்ச்சியுடன் தொடங்கிய அவனது சட்ட வாழ்க்கை சட்டென்று நின்றுபோனது.உண்மையான சமூகநீதி மக்கள் போராட்டங்களாலேயே சாத்தியம் என்பதை உணர்ந்தான்.ஆனால் அதை முன்னெடுக்க வழி தெரியாமல் இருந்தான்.

அவன் சினிமா பார்ப்பதில்லை.தொலைக்காட்சி பார்ப்பதில்லை.ஜனரஞ்சக பத்திரிக்கைகள் வாசிப்பதில்லை.இசை கேட்பதில்லை.ராவின் வாழ்க்கையில் காதல் இருந்ததில்லை.பெண்கள் இருந்ததில்லை.ஒரு முறை ஒரு பெண் அவனிடம் ஒரு வழக்கிற்காக வந்தாள்.பெயர் நர்மதா.அவள் தான் ஒரு கார்ப்ரேட் நிறுவணத்தில் வேலை செய்வதாகவும்,கார்ப்ரேட்களுக்கான சமூக பொறுப்புக்கான குழுவிலும் பங்கேடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவனிடம் தெரிவித்திருக்கிறாள். கிராமங்கள் தோறும் சென்று மரக்கண்று நடுவது , அங்குள்ள பள்ளிகளை தங்கள் பொறுப்பில் கொண்டுவந்து மானவர்களுக்கு உதவுவது போன்றவற்றில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறாள்.மிக்க மகிழ்ச்சியென்றும் கார்ப்பரேட்கள் நிலத்தை , கானகங்களை ஆக்கிரமித்தோடு அல்லாமல் இதுபோன்ற சமூக பொறுப்புள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கிறான்.அவள் அவன் புகழ்ச்சியில் ஏதோ உள்நோக்கு உள்ளதாக எண்ணினாலும் சிரித்திரிக்கிறாள்.ஒரு பெண் அவளது கணவர் மூலம் அடிக்கடி உடல் சார்ந்த தொந்தரவுக்கு உள்ளாவதாகவும், தன்னிடம் அந்த பெண் இதை அவள் மரக்கண்று நட்டுக்கொண்டிருந்த போது தனிப்பட்ட முறையில் தெரிவித்தாள் என்றும் , அவளுக்கு எப்படியும் அவளுடைய கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டியது என்று முடிவு செய்துவிட்டதாகவும் , விசாரிக்கையில் ராவ்தான் சிறந்த சமூகநல பொறுப்புள்ள வழக்கறிஞர் என்பதை அறிந்ததாகவும் தெரிவித்திறிக்கிறாள்.அவள் அவனுக்கு அழகாக இருந்திருக்கிறாள்.இருந்தாலும் உண்மையை சொல்லி இருக்கிறான்.தான் குடும்ப நல வழக்குகள் எடுத்த்தில்லையென்று.அவள் பிடிவாதமாக ராவ் தான் இந்த வழக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிஇருக்கிறாள்.கட்டளை இட்டிருக்கிறாள்.விவாகரத்து பெரிய விஷயம் இல்லை.ஒரு வருடம் பிரித்திருந்தாள் கிடைத்துவிடும் என்று அந்த பாதிக்கப்பட்ட பெண்மனியிடம் சொல்லியிருக்கிறான்.அதைத் தொடர்ந்து நர்மதாவும் , ராவும் அடிக்கடி சந்திந்து இருக்கிறார்கள்.

நர்மதாவுக்கு வயது முப்பது.அவள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கையில் தான் பெண்ணியவாதி என்று பதில் சொல்லியிருக்கிறாள்.ஒஹோ என்பதாக எதிர்வினையை பதிவுசெய்திருக்கிறான் ராவ்.ஒரு நாள் ஏதேர்ச்சையாக அவள் சேலையில் வந்திருக்கிறாள்.அன்று தான் ராவ் முதல் முறையாக அவளிடம் காதல்வய பட்டிருக்கிறான்.அவளிடம் அதை தெருவிக்க தின்டாடியிருக்கிறான்.இறுதியாக அன்று அவளிடம் அவள் மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்திருக்கிறான்.அவளும் தான் பெண்ணியவாதி என்பதை மறந்து போய் சற்று தடுமாறி இருக்கிறாள்.அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்லியிருக்கிறான்.அவள் அவனது கண்ணத்தில் முத்தம் கொடுத்திருக்கிறாள்.அப்படியென்றால், அப்படியென்றால் அவளும் காதல் என்பது தெரிந்திருக்கிறது.ஆனால் அவள் ஒரு பெண்ணியவாதி என்பதை குறித்து கேட்க நினைத்து கேட்காமல் இருந்துவிட்டான்.அன்று அவர்கள் கடற்கரை நீண்ட பேசியபின் அன்றைய இரவை சோளகார்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்திலேயே கழிக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்.அன்றைய நாளில் அவன் அழுதான் .அவள் விசாரிக்கையில் தனக்கு அவள் அளித்த்து உடலை அல்ல , கருணை என்று சொல்லியிருக்கிறான்.மறுநாள் இனி பொதுநல வழக்குகள் போன்றவற்றில் ஈடுபடாமல் பணம் சம்பாதிக்ககூடிய வழக்குகளை தேர்வு செய்வது என்று அவளை வழியனுப்பிவிட்டு நீதிமன்றம் செல்கையில் சிந்தித்தபடி சென்றிருக்கிறான்.நர்மதா மூலம் தன்னிடம் விவாகரத்து வழக்குக்காக வந்த பெண்ணின் கணவன் சட்டென்று அவன் முன் பாய்ந்து கத்தியால் இரண்டு முறை "சதக் சதக்" என்று குத்தியபின் மறைந்துபோயிருக்கிறான்.நர்மதா அன்றைய தினம் பேருந்தில் பயணம் செல்கையில் தான் ஒரு பெண்ணியவாதி என்றும் திருமணம் செய்து கொள்ளகூடாது என்றும் , ஆக இனி ராவை தொடர்பு கொள்ள கூடாது என முடிவு செய்திருக்கிறாள். கொலை செய்தது யார் என தெரியவராமல் அப்படியே வழக்கு முடிங்கி போயிற்று.

ஆக மிகப்பெரிய லட்சியவாதியாகவும், சமூக நலத் தொண்டனாகவும் வந்திருக்கக்கூடிய ஸ்ரீனிவாசராவ் இறந்துபோனான்.அவன் இறந்துபோகும்போது நர்மதாவுடனான முந்திய நாள் இரவும், இந்த கொலையும் தனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கருணைகள் என்று சொன்னதாக ஒரு டீக்கடை பையன் சொன்னான்.அவன் சொன்னதை காவல் துறையினர் முக்கியமாக கருதவில்லை.அதன்பின் அந்த விவாகரத்து வழக்கு அப்படியே நின்று போனதால் அந்த பெண்ணும், அவனது கனவனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.




No comments: